Jammu and Kashmir - கடந்த ஆகஸ்ட் மாதம், முதல் வாரத்தின்போது, ஜம்மூ காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லி, சுற்றுலா பயணிகளை வெளியேற வைத்தது மத்திய அரசு.
New Delhi/Srinagar: சுமார் 2 மாதங்களுக்குப் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு (Tourists) ஜம்மூ காஷ்மீர் (Jammu & Kashmir) திறக்கப்பட்டுள்ளது. ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு (Article 370 move) முன்னர், அம்மாநிலத்தில் இருந்த அனைத்து சுற்றுலா பயணிகளையும் வெளியேறச் சொல்லி உத்தரவிட்டது மத்திய அரசு. அப்போதிலிருந்து 50 நாட்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகளுக்கு அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போதுதான் அந்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
ஜம்மூ காஷ்மீர் ஆளுநர், சுற்றுலா பயணிகளுக்கு இருந்த தடையை நீக்குமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், முதல் வாரத்தின்போது, ஜம்மூ காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லி, சுற்றுலா பயணிகளை வெளியேற வைத்தது மத்திய அரசு.
சுமார் 20,000 முதல் 25,000 சுற்றுலா பயணிகள் அப்போது ஜம்மூ காஷ்மீரில் இருந்ததாக சொல்லப்படுகிறது. சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்ற நேரமாக அது இருந்தது. 370 வது சட்டப் பிரிவு நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து காஷ்மீரில் இணைய மற்றும் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டிருந்தது.
அதேபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைத்தது அரசு. தற்போதும் சில கட்டுப்பாடுகள் காஷ்மீரில் தொடர்கின்றன. அதேபோல, சில அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வீட்டுச் சிறையில்தான் உள்ளனர்.
காஷ்மீர் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் சுற்றுலா துறை, ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் காஷ்மீருக்கு 1.74 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல ஜூலையில் 1.52 லட்சம் பேர் சுற்றுலாவுக்காக வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஆகஸ்ட் மாதமோ அதற்குப் பின்னரோ சுற்றுலா பயணிகள் வந்ததற்கான எந்த ஆவணங்களும் அரசு தரப்பிடம் இல்லை.