This Article is From Jan 18, 2020

ஜம்மு காஷ்மீர் : ப்ரீபெய்ட் மொபைல்களுக்கு எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை விரைவில் தொடக்கம்!

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி நீக்கப்பட்டதை தொடர்ந்து, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கையாக மொபைல் சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தன. நிலைமை சீரடைவதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

ஜம்மு காஷ்மீர் : ப்ரீபெய்ட் மொபைல்களுக்கு எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை விரைவில் தொடக்கம்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம்தேதி முதற்கொண்டு ஜம்மு காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

ஜம்மு காஷ்மீரில் ப்ரீபெய்ட் மொபைல் சேவையை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ்., வாய்ஸ்கால் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி நீக்கப்பட்டது. இதையடுத்து, அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது நிலைமை அங்கு சீரடைந்து வருகிறது.

இதையடுத்து கட்டுப்பாடுகளை மெல்ல மெல்ல மத்திய அரசு தளர்த்தத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ப்ரீபெய்ட் மொபைல் சேவையை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு விரைவில் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவைகள் மீண்டும் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370 நீக்கப்பட்டது, சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஐ.நா. சபையிலும் விமர்சனங்கள் எழுந்தன.  

காஷ்மீரில் போஸ்ட்பெய்டின் 2ஜி சேவைகளும் பந்திபோரா மற்றும் குப்வாரா மாவட்டத்தில் விரைவில் தொடங்கும் என்றும், இதேபோன்று  ஜம்முவில் உள்ள 10 மாவட்டங்களிலும் இதே சேவை தொடங்கும் என்றும் அரசு உயர் அதிகாரியான ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மொபைல் சேவைகளை வழங்குவதற்கு முன்பாக டெலிகாம் சேவை நிறுவனத்தினர், பயனாளிகளின் தகவல்களை சரி செய்து  கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த வாரத்தில் ப்ராட்பேண்ட் இன்டர்நெட் சேவை காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில இடங்களில் மீண்டும் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், சமூக வலைதளங்களின் சேவை பயனாளிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

முன்னதாக இன்டர்நெட் சேவை வழங்கப்பட வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், காஷ்மீரில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை ஒரு வாரத்திற்குள்ளாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. நடமாட்டத்தை தடுத்தல், இன்டர்நெட் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை பறித்தல் என்பது அதிகாரத்தை செயல்படுத்தும் முறையல்ல என்று நீதிமன்றம் மத்திய அரசை கண்டித்திருந்தது.

இருப்பினும் இந்த உத்தரவுகளை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் முறையாக கடைபிடிக்கவில்லை என்று புகார்கள் எழுகின்றன. சமூக வலைதளங் பயன்பாட்டிற்கு முழு தடை என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இன்னும் அங்கு நடைமுறையில் இருக்கின்றன.

.