காயம் அடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Pulwama: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். கையெறி குண்டுகளை தீவிரவாதிகள் வீசியதில், பொதுமக்கள் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
நேற்று ராணுவ வாகனம் ஒன்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. இந்த சம்பவமும் புல்வாமா மாவட்டத்தில்தான் நடந்தது. இதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். 16 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கடந்த வாரம் இந்திய தூதரகத்திடம் பாகிஸ்தான் தெரிவிதிருந்தது. கடந்த பிப்ரவரியில் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர்.