3 நாட்களாக என்கவுன்ட்டர் நடைபெற்றுள்ளது
Srinagar: ஜம்மு காஷ்மீரில் 60 மணி நேரமாக தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுன்ட்டர் முடிவுக்கு வந்துள்ளது. இதில் 5 பாதுகாப்பு படை வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தீவிரவாதிகள் எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்கிற விவரம் உடனடியாக வெளிவரவில்லை. குப்வாரா மாவட்டத்தின் பதாகந்த் என்ற கிராமத்தில் இந்த என்கவுன்ட்டர் நடந்துள்ளது. தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளியன்று நடந்த சண்டையின்போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அத்துடன் சண்டை முடிந்தது என்று கருதப்பட்டபோது, மீண்டும் தீவிரவாதிகள் சுட ஆரம்பித்தனர். இதையடுத்து கடந்த 3 நாட்களாக என்கவுன்ட்டர் நடந்தது.
இந்த சம்பவத்தில் ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 3 வீரர்களும், மாநில போலீசை சேர்ந்த 2 பேரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். 8 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டிடத்திற்குள் பதுங்கி இருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது சண்டை ஓய்ந்த நிலையில், தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்பு பகுதியில் இந்த சண்டை நடந்திருப்பதால் பதற்றம் அதிகமாக காணப்பட்டது.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் கூடுதல் படைகள் காஷ்மீருக்கு வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.