சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Srinagar: சுமார் ஒரு மாத கெடுபிடிக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் உறவினர்களை முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதனால் பிரச்னை எழாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள ஹரி நிவாஸில் உமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மெகபூபா முப்தி சுற்றுலாத்துறையின் பங்களா இருக்கும் செஸ்மஷாகியில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் உமர் அப்துல்லாவை அவரது சகோதரி சாபியா மற்றும் குழந்தைகள் சுமார் 20 நிமிடம் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. இதேபோன்று மெகபூபா முப்தியை அவரது தாயார், சகோதரி உள்ளிட்டோர் வியாழன் அன்று சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
காஷ்மீரில் 3 முறை முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா, டெலிபோன் வசதி இல்லாத இடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தனது மகனை பார்க்க வேண்டும் என்று அவர் பலமுறை கோரிக்கை வைத்தும் அது ஏற்கப்படவில்லை என்று தெரிகிறது.
முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகியோருக்கு டிவி பார்க்க, செய்தித் தாள்கள் வாசிக்க வசதி செய்து கொடுக்கப்படவில்லை. ஆனால் படம் பார்க்க மட்டும் டிவிடியை அதிகாரிகள் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உமர் அப்துல்லா தினமும் கிண்டில் சாதனம் உதவியால் புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கிறார். வழக்கமான நடை பயிற்சியிலும் அவர் ஈடுபடுகிறார்.