ஒவ்வொரு கட்டமாக காஷ்மீரில் படைகள் குறைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
New Delhi: உயிரிழப்பை தவிர்ப்பதற்காகத்தான் காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டபோது படைகள் பெரும் அளவில் குவிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் என்.டி.டி.வி.க்கு தகவல் அளித்துள்ளார்.
சுமார் 70 ஆண்டுகளாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு நீக்கியது. இதற்கு முன்பாக காஷ்மீரில் கடும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. அங்கிருந்து அமர்நாத்துக்கு செல்லும் புனித பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
காஷ்மீர் அரசியல் தலைவர்கள், பிரிவினைவாதிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரில் வெளிநாட்டவர் தங்களது நாடுகளுக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் அங்கு ஏதேனும் நடக்கப்போவதை மறைமுகமாக காட்டின.
இதன்பின்னர்தான் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. முன்னதாக 50 ஆயிரம் துணை ராணுவத்தினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டு நிலைமை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட சுமார் 400 அரசியல் தலைவர்கள் அங்கு கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் என்.டி.டி.வி.க்கு விளக்கம் அளித்துள்ளார்.
'2016 - ல் காஷ்மீரில் ஏற்பட்ட பிரச்னையின்போது ஏராளமானோர் உயிரிழந்தார்கள். அந்த உயிரிழப்பை தவிர்ப்பதற்காகத்தான் தற்போது பாதுகாப்பை பலப்படுத்தி நடவடிக்கை எடுத்தோம்' என அந்த உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.