This Article is From Mar 22, 2020

மக்கள் ஊரடங்கு: இந்த ஒரு உணவகம் திறந்திருக்கும் - தமிழக அரசு உறுதி!

"மக்கள் ஊரடங்கு உத்தரவை ஞாயிறு முதற்கொண்டு பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிருங்கள்"

மக்கள் ஊரடங்கு: இந்த ஒரு உணவகம் திறந்திருக்கும் - தமிழக அரசு உறுதி!

"உணவு போன்ற அடிப்படை தேவைப் பொருட்களை பதுக்க வேண்டாம். பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்."

ஹைலைட்ஸ்

  • நாளை, 'மக்கள் ஊரடங்கு' கடைபிடிக்கப்பட உள்ளது
  • பிரதமர் மோடி, 'மக்கள் ஊரடங்கு'-க்கு அழைப்பு விடுத்துள்ளார்
  • தமிழக அரசு, பிரதமர் மோடியின் அழைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாளை ஒரு நாள் ‘மக்கள் சுய ஊரடங்கு' என்னும் திட்டத்தை அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு மாநில அரசுகள் மற்றும் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் ‘அம்மா உணவகங்கள்' திறந்திருக்கும் என்று அரசு உறுதியளித்திருக்கிறது.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், கொரோனாவின் தாக்கம், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் செய்ய வேண்டியது உள்ளிட்டவை தொடர்பாகப் பிரதமர் மோடி, இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர், “அடுத்து வரும் சில வாரங்களுக்கு அவசியம் ஏற்பட்டாலே தவிர, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். மக்கள் ஊரடங்கு உத்தரவை ஞாயிறு முதற்கொண்டு பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிருங்கள்.

நாம் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை ஏற்று நடக்க வேண்டும். உணவு போன்ற அடிப்படைத் தேவைப் பொருட்களைப் பதுக்க வேண்டாம். பற்றாக்குறையைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. நிதியமைச்சர் தலைமையிலான குழு இதனைச் சரி செய்யும். நமக்குச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். ஞாயிறன்று மாலை 5 மணிக்கு வீட்டின் மொட்டை மாடி அல்லது ஜன்னலுக்கு வந்து 5 நிமிடம் நில்லுங்கள். அப்போது கைகளைத் தட்டி, மணியடித்து உங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.

கொரோனாவை சரி செய்ய மருந்து கிடையாது. நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வழக்கம்போல சுதந்திரமாக நடமாடினால் நீங்கள் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் ஆபத்தில் தள்ளப் பார்க்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்,” என்று உரையாற்றினார். 

இதனால் நாளை மாநிலத்தில் இருக்கும், அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளைத் தவிர உணவகங்கள் உட்பட வேறு எந்த கடைகளுமே திறந்திருக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு, ‘முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க நாளை அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளது. 

.