This Article is From Dec 01, 2018

முதன்முறையாக ஒன்றாக சந்தித்த ஜப்பான், இந்தியா, அமெரிக்கா; பிரதமர் மோடி மகிழ்ச்சி!

G20 Summit In Argentina: முதன்முறையாக ஜப்பான், அமெரிக்க அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் (JAI) ஒன்றாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்

2018 G20 Summit: இந்தப் பேச்சுவார்த்தை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘வெற்றி’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Buenos Aires:

முதன்முறையாக ஜப்பான், அமெரிக்க அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் ஒன்றாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘வெற்றி' என்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும், ‘மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட்டால், உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அது மிகவும் உறுதுணையாக இருக்கும்' என்றும் தெரிவித்துள்ளார். 

அர்ஜென்டினாவில் இருக்கும் பியூனோ ஏர்ஸ் நகரத்தில், ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க ஜி-20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அர்ஜென்டினாவில் முகாமிட்டுள்ளனர். இந்த சூழலில் தான் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘எங்கள் முத்தரப்பு சந்திப்பு, ஒரு வெற்றியின் அடையாளமாகும். இது ஒரு புதிய தொடக்கம். இது உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்' என்றார்.

அவர் மேலும், ‘அமெரிக்கா மற்றும் ஜப்பான், அவர்கள் இருவருக்கு இடையில் நட்புறவுடன் இருப்பது சிறப்பான விஷயம். இரு நாட்டுத் தலைவர்களும் என்னோடு நல்ல தொடர்பில் இருப்பவர்கள். அவர்களுடன் இணைந்து வேலை செய்யப் போவது கண்டிப்பாக சிறப்பாக இருக்கும்' என்று விளக்கினார். 

ஜி-20 மாநாட்டில் முன்னர் உரையாற்றிய மோடி, தனது தலைமையிலான அரசு எடுத்துள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். அதில், ஜன்தன் யோஜனா, முத்ரா யோஜனா, ஸ்டார்ட்-அப் இந்தியா போன்ற திட்டங்கள் குறித்து விளக்கினார். 

.