ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரசில் சேர்ந்துள்ளார் மன்வேந்திரா சிங்
New Delhi: ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. இவற்றில் 50 தொகுதிகளில் வெற்றி பெறப்போவது யார் என்பதை தீர்மானிப்பவர்களாக ராஜ்புத் சமூக மக்கள் உள்ளனர்.
பாஜகவில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வாய்ப்பு மறுத்தது. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் அவரது மகனும், ராஜ்புத் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவருமான மன்வேந்திரா சிங் பாஜகவில் இருந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகினார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், பாஜகவில் இருந்தது நான் செய்த மிகப்பெரும் தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். இதன் மூலம் ராஜ்புத் வாக்குகளை காங்கிரஸ் கட்சி கணிசமாக பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.