ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை அந்த ஆணையம் 100 பேரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 25 ஆம் தேதி வரை விசாரணை ஆணையம் 57 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இன்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தைச் சேர்ந்த 11 பேரிடம் விசாரணை நடத்த உள்ளது ஆணையம்.
ஜெயலலிதாவின் மருத்துவரான சிவக்குமார், வரும் 28 ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர் சிவக்குமார், இதோடு 5வது முறையாக நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளார். அவரிடம், 2014 முதல் 2016 வரை யாரெல்லாம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர் என்றும், அவருக்கு என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன என்பது குறித்தும் தகவல் தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியும், அதற்கு மாற்றுத் தேதி கேட்டு பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அப்போலோ மருத்துவமனையின் ரேடியாலஜிஸ்ட் மருத்துவர் மீரா மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் தவபழனி ஆகியோரை வரும் 28 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது ஆறுமுகசாமி தலைமையிலான் விசாரணை கமிஷன்.
சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா பேசியதுபோல ஒரு ஆடியோ பதிவு வெளியானது. அது குறித்து அப்போலோ மருத்துவனையின் டாக்டர்.அர்ச்சனா, ‘அந்த ஆடியோ பதிவு அப்போலோ மருத்துவமனையில் தான் பதிவு செய்யப்பட்டது’ என்று விசாரணை ஆணையத்திடம் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் கடந்த 25 ஆம் தேதி ஆஜரான அதிமுக-வின் மனோஜ் பாண்டியன், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக நிலவி வரும் மர்மத்துக்குக் காரணம் சசிகலா தான்’ என்று குற்றம் சாட்டினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 ஆம் தேதி, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பலகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டப் பிறகும், டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்தார்.
இதையடுத்து தமிழக அரசு, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, செப்டம்பர் 2017-ல் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், 2017, நவம்பர் 22-ல் தனது விசாரணையைத் தொடங்கியது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)