This Article is From Dec 05, 2018

ஜெ., 2-ம் ஆண்டு நினைவு நாள்: முதல்வர், அமைச்சர்கள் உறுதி ஏற்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாள் இன்று அதிமுக மற்றும் அமமுக-வினரால் அனுசரிக்கப்பட்டது.

ஜெ., 2-ம் ஆண்டு நினைவு நாள்: முதல்வர், அமைச்சர்கள் உறுதி ஏற்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாள் இன்று அதிமுக மற்றும் அமமுக-வினரால் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இரு கட்சிகளின் சார்பாகவும் சென்னையில்  இன்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. 
அதிமுக சார்பில் இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் அதிமுக-வின் நிரந்தப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு அமைதி ஊர்வலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இருவரும் நினைவிடத்தில் மலர் தூவி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதேபோன்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. 

ஜெயலலிதா  சமாதிக்குச் சென்ற முதல்வரும் அமைச்சர்களும், அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  பின்னர் ஜெயலலிதா சமாதி முன்னிலையில்  அவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.

இதன்பின்னர் அமமுக தலைவர் டிடிவி தினகரன் தலைமையில் அவரது கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர். 

இதையடுத்து, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவர் தீபா தலைமையில் அவரது கணவர் மாதவன் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் ஜெயலலிதா சமாதிக்கு வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோன்று பொதுமக்கள் பலரும், நடிகர் விஷால்  உள்ளிட்டோரும் ஜெயலலிதா சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தினர்.  

இதற்கிடையே வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் சென்னையில்  கடும் போக்குவரத்து நெரிசல்  காணப்பட்டது. 

.