இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- தமிழகத்தில் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்
- இந்தியளவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று, ''திருச்சியைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்தவர். அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்று கூறியிருந்தார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
அதைத் தொடர்ந்து மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார் விஜயபாஸ்கர். புதிதாகப் பாதிக்கப்பட்ட 2 பேரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று வரை தமிழகத்தில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த எம்பி, ஜெயக்குமார், கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள தனது தொகுது நீதியிலிருந்து 1 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.