"மாநில உரிமைகளை முழுவதுமாக விழுங்கிக் கொண்டு, மொத்த அதிகாரமும் மத்தியில் குவிய வேண்டும் என பாஜக நினைக்கிறது”
17வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நிறைவு பெற்ற கையோடு, காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்திலும் பங்கெடுத்துவிட்டு இன்று சென்னை திரும்பியுள்ளார் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்.
நாடாளுமன்ற தொடரின் போது, 6 முறை பேசிய அவர், தொகுதி மக்கள் பிரச்னை குறித்து அதிகமாக குரல் கொடுத்தார். குறிப்பாக தொகுதியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, தொகுதியில் இருக்கும் தொழிலாளர் நலன்களுக்கான வாதம், பட்ஜெட்டில் இருக்கும் குறைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை காங்கிரஸ் செயற்குழு கூடி, அக்கட்சியின் தலைவராக சோனியா காந்தியைத் தேர்வு செய்தது. அந்தக் கூட்டத்தையும் முடித்துக் கொண்டு சென்னைக்கு வந்த அவருக்கு, விமான நிலையத்தில் தடபுடலான வரவேற்பு கொடுக்கப்பட்டது. திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் படைசூழ வந்து மாலை, துண்டு சகிதம் விமான நிலையத்தையே திக்குமுக்காட வைத்துவிட்டனர்.
செய்தியாளர்கள் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னரே, “நான் அதிகபட்சம் 30 பேர் வந்திருப்பார்கள் என்று நினைத்தேன். நூற்றுக்கணக்கில் தொண்டர்கள் அணி திரண்டு வந்து என்னை வரவேற்பார்கள் என்று நினைக்கவே இல்லை. இது புத்துணர்ச்சி அளிக்கிறது. எனர்ஜி டானிக் போன்றது இது” என்று பூரித்தார்.
தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் பற்றி பேசும்போது, “நாடாளுமன்றத்துக்கு நான் முதன்முறையாகச் செல்வதால், பலரும் என்னை ஜூனியராகவே பார்த்தனர். ஆனால், இந்த ஜூனியர்தான் நாடாளுமன்றத்தில் 6 முறை உரையாற்றினான். பாஜக-வின் நாசகார நடவடிக்கைகளுக்கும், ஜனநாயக விரோத செயல்களுக்கும் எதிராக முடிந்த வரை குரல் கொடுத்தேன். நான் மட்டுமல்ல தமிழகத்திலிருந்து திமுக கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்துக்குச் சென்ற அனைத்து உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு பல்வேறு வகைகளில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இருந்தாலும் அதீத பெரும்பான்மை கொண்ட பாஜக, எல்லா சக்திகளையும் அடக்கி ஆளவே பார்க்கிறது. குறிப்பாக மாநில உரிமைகளை முழுவதுமாக விழுங்கிக்கொண்டு, மொத்த அதிகாரமும் மத்தியில் குவிய வேண்டும் என பாஜக நினைக்கிறது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரே கரடுமுரடாக இருந்தது” என்று கூறியவரிடம்,
“வைகோ - கே.எஸ்.அழகிரி மோதல் குறித்து…” என்று ஒரு நிருபர் கேட்க, “ ‘…நீங்க எந்த பத்திரிகை' அப்படியென்று நான் சிலர் போல கேள்வி எழுப்பமாட்டேன். எங்கள் கட்சியின் அமைதிக் கடலான கே.எஸ்.அழகிரி அவர்கள், இந்த விவகாரத்தில் போதுமான விளக்கத்தைக் கொடுத்துவிட்டார். இதற்கு மேலும் நான் அது குறித்து பேசினால் நன்றாக இருக்காது அல்லவா?” என்று நகைப்புடன் கேள்வியெழுப்பினார்.