ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, அதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக இந்த விசாரணை ஆணையம் முன்பாக 100-க்கும் அதிகமானோர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சசிகலாவை தவிர்த்து ஏறக்குறைய ஜெயலலிதா தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள ஆறுமுகசாமி கமிஷன், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக சசிகலாவை விசாரிக்கும் வகையில், தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டி, கர்நாடக போலீஸ் டிஜிபி உள்ளிட்டோரிடம் கடிதம் அனுப்பி அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரண விவகாரத்தில் முக்கிய சாட்சியாக சசிகலா கருதப்படுகிறார். ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறுமுகசாமி கமிஷனுக்கு அனுமதி கிடைத்தால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், உள்ளிட்ட ஜெயலலிதாவுடன் தொடர்புடைய 100-க்கும் அதிகமானோரிடம் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தியிருக்கிறது. இருப்பினும் முக்கிய சாட்சியாக கருதப்படும் சசிகலாவை விசாரிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வந்தன. இதையடுத்து இந்த நடவடிக்கையை ஆறுமுகசாமி கமிஷன் எடுத்துள்ளது.
இதேபோன்று லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவிடமும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.