This Article is From Dec 05, 2019

ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுக சார்பில் அமைதிப் பேரணி: போக்குவரத்து மாற்றம்!

தொடர்ந்து 70 நாட்களுகு மேலாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்ந்தது. இதையடுத்து, டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அளவில், ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுக சார்பில் அமைதிப் பேரணி: போக்குவரத்து மாற்றம்!

அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் இன்று அவரது நினைவிடம் நோக்கி அமைதிப்பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு செப்.22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை முதலில் கூறும்போது, காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று விளக்கம் அளித்தது. 

இதைத்தொடர்ந்து, காய்ச்சல் குறைந்திருப்பதாகவும், மருத்துவமனையிலேயே தங்கி சில நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிக்கை வெளியானது. எனினும் நாட்கள் கடந்தது, அவர் மருத்துவமைனயில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. பின்னர் லண்டனில் இருந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வரவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

பின்னர் அக்டோபர் மாதத்தில் ஜெயலலிதாவுக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதால் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு வரவைக்கப்பட்டதாக மருத்துவனை தெரிவித்தது. தொடர்ந்து 70 நாட்களுகு மேலாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்ந்தது. இதையடுத்து, டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அளவில், ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் வரை இந்த அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் கூட்டணி கட்சியினரும் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக, மெரினா காமராஜர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் போர் நினைவு சின்னம் சந்திப்பில் திருப்பப்பட்டு கொடிமரச்சாலை, அண்ணா சாலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம்.

˜முத்துசாமி பாயின்டில் இருந்து வரும் வாகனங்கள் கொடிமரச் சாலைக்கு செல்ல அனுமதிக்காமல் அண்ணா சாலை வழியாக சென்று தங்களது இலக்கினை அடையலாம்.˜ நேப்பியர் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆடம்ஸ் பாயின்டில் திருப்பப்பட்டு சுவாமி சிவானந்த சாலை வழியாக சென்று தங்களது இலக்கினை அடையலாம்˜

தெற்கில் இருந்து வரும் வாகனங்கள் காந்தி சிலை சந்திப்பில் திருப்பப்பட்டு ராதாகிருஷ்ணன் சாலை வழியாக சென்று தங்களது இலக்கினை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.