ஜெயலலிதா அளித்துச் சென்ற வாக்குகளின் சதவீதம் சிந்தாமல் சிதறாமல்அப்படியே உள்ளது.
ஜெயலலிதாவின் ஓட்டு சதவீதம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வேலூரில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அதிமுக தோல்வி குறித்து கட்சியன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் பாராளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள், அதிமுகவின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்து இருக்கின்றன.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மொத்தம் 4,77,199 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மிக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் என்றாலும் இது கழகத்தைப் பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்திற்குள் அடங்கும் தேர்தல் முடிவு என்பதை யாரும் மறுக்க முடியாது.
வேலூர் தொகுதியில் 46.51 சதவீத வாக்குகளை கழக வேட்பாளர் பெற்றுள்ளார். இதன்மூலம், ஜெயலலிதா அளித்துச் சென்ற வாக்குகளின் சதவீதம் சிந்தாமல் சிதறாமல் நம்மிடம் அப்படியே உள்ளது என்பதைத் தான் வேலூர் தொகுதியில் இரட்டை இலை பெற்றிருக்கும் வாக்குகள் பறை சாற்றுகின்றன.
இத்தகயை மகத்தான உண்மையை உலகுக்கு உணர்த்திட, வேலூர் பாராளுமன்றத் தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்ட கழக நிர்வாகிகள், மற்றும் கழக உடன்பிறப்புகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளனர்.