ஹைலைட்ஸ்
- அமைச்சர் சின்ஹாவின் செயலுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது
- விமர்சனங்களுக்கு ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார் சின்ஹா
- ராஞ்சி, ராம்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது
Ranchi: பசுவதை செய்தார் என்று குற்றம் சாட்டி சென்ற ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி ஜார்கண்ட் மாநில ராம்கர் பகுதியில் அலிமுதின் அன்சாரி என்பவரை ஒரு அடிப்படைவாத கும்பல் தாக்கிக் கொன்றது. இது குறித்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பாஜக-வைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம். சில மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பான வழக்கில் 11 பேரும் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது, குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களை தனது வீட்டுக்கு வரவழைத்து வரவேற்பு கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா.
இது எதிர்க்கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார் அமைச்சர் சின்ஹா.
அமைச்சருக்கு எதிராக விமர்சனங்கள் அதிகம் எழுந்த நிலையில் அவர், ‘நான் எந்த கலவரங்களுக்கும் ஆதரவானவன் அல்ல. அரசியல் சாசனம் வழங்கியுள்ள ஜனநாயகத்தில் சட்டம் தான் முதன்மை பெற வேண்டும். கலவரம் மூலம் அமைதியை குலைக்க நினைத்தால், சட்டத்தின் இறும்புக் கரங்கள் கொண்டு யாராக இருந்தாலும் ஒடுக்கப்பட வேண்டும். ராஞ்சி உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரை கீழ்நிலை நீதிமன்றத் தீர்ப்பு சரியானது இல்லை என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தற்போது, ராஞ்சி நீதிமன்ற தீர்ப்பும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆனால், கடைசியில் நியாயமே வெல்லும்’ என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை சின்ஹா முன்பிருந்தே, ‘நடந்த சம்பவம் குறித்து பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் நான் சொல்கிறேன், இதில் முழு நீதி வழங்கப்படவில்லை’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.