This Article is From Jun 02, 2020

முறிகிறதா நிதிஷ் குமார் - பாஜக கூட்டணி..? - ஓராண்டில் பிகார் சட்டமன்றத் தேர்தல்; அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்!

லோக்சபா தேர்தலைத் தொடர்ந்து அமித்ஷா, நிதிஷ் குமாரின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

முறிகிறதா நிதிஷ் குமார் - பாஜக கூட்டணி..? - ஓராண்டில் பிகார் சட்டமன்றத் தேர்தல்; அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்!

ஐஜதவுக்கு மந்திரி சபையில் அதிக இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் நிதிஷ். ஆனால் ஒரேயொரு அமைச்சர் பதவி மட்டுமே ஒதுக்கியது பாஜக.

ஹைலைட்ஸ்

  • அமித்ஷா அடுத்த வாரம் வீடியோ பிரசாரத்தில் ஈடுபடுகிறார்
  • பிகாரில் தேஜகூ பிரசாரத்தை ஆரம்பிக்கிறார் அமித்ஷா
  • பாஜகவின் பிரசாரத்திற்கு எதிராக திட்டமிடுகிறது ராஜத கட்சி
New Delhi:

பிகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பாஜகவும் கூட்டணியில் உள்ளன. அடுத்த ஆண்டு பிகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் ஐஜதவை பாஜக கழட்டிவிடுமா அல்லது கூட்டணி தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

வரும் ஜூன் 9 ஆம் தேதி, அடுத்த ஆண்டு நடக்க உள்ள பிகார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை அமித்ஷா ஆரம்பிக்க உள்ளார். வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் நடக்கவுள்ள இந்தப் பிரசாரமானது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அடுத்தக்கட்ட மூவ் குறித்து தெரிவிக்கும் வகையில் இருக்கும். ஃபேஸ்புக் லைவ் உள்ளிட்டப் பல்வேறு தளங்களில் ஒளிபரப்பட உள்ள இந்தப் பிரசாரத்திற்கு, 243 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து சுமார் 1 லட்சம் பேரைத் திரட்ட மாநில பாஜக இலக்கு வைத்துள்ளது. 

இந்த வீடியோ பிரசாரத்தின் மூலம், அமித்ஷா முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது. குறிப்பாக நிதிஷ் குமார்தான், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக இருப்பாரா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம். 

கொரோனா வைரஸ் நெருக்கடியில் நிதிஷ் குமார், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் சரியாக நடந்து கொள்ளவில்லை என்று பாஜகவினரின் முக்கியப் புள்ளிகள் கருதுகின்றனர். இந்த விஷயம் சட்டமன்றத் தேர்தலில் எதிர்மறையாக எதிரொலிக்கலாம் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். 

அதே நேரத்தில் மாநில பாஜகவின் உள்வட்டாரத்தோடு தொடர்பில் இருப்பவர்கள், ‘கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நிதிஷ் குமாருக்கு பிகாரில் செல்வாக்கு அதிகமாகவே உள்ளது என நினைக்கின்றனர். அவரை கழட்டிவிட்டால் அந்த செல்வாக்கை இழக்க நேரிடும்' என்று கருதுகிறார்கள் எனத் தெரிவிக்கிறார்கள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த ஐஜத, மாநிலத்தில் தங்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று உறுதியாக சொன்னது. இதனால் பாஜகவுக்கும் ஐஜதவுக்கும் மோதல் ஏற்பட்டது. ஆனால் இறுதியில் 50 சதவீத இடங்களை விட்டுக் கொடுத்தார் அமித்ஷா. தேர்தல் முடிவுகளும் நிதிஷ் குமாருக்குச் சாதகமாகவே வந்தது. தேசிய ஜனநாக கூட்டணி, மொத்தமிருந்த 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 39-ல் வென்றது. 

லோக்சபா தேர்தலைத் தொடர்ந்து அமித்ஷா, நிதிஷ் குமாரின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. ஐஜதவுக்கு மந்திரி சபையில் அதிக இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் நிதிஷ். ஆனால் ஒரேயொரு அமைச்சர் பதவி மட்டுமே ஒதுக்கியது பாஜக. அதை ஏற்க மறுத்துவிட்டார் நிதிஷ் குமார். இதனால் இருவருக்கும் இடையிலான உறவில் சுமூகமான போக்கு இல்லை எனப்படுகிறது. 

மேலும், கொரோனா பரவலைத் தொடர்ந்து வெளி மாநிலங்களிலிருந்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் நிதிஷ் குமார் சரியாக நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டும் சில பாஜக தலைவர்கள், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட 1000 ரூபாய் நிவாரண நிதி குறித்தும் விமர்சனம் வைத்தனர்.

ஆனால் நிதிஷ் குமார், ‘கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் அளவுக்கு பிகாரில் உட்கட்டமைப்பு வசதிகள் கிடையாது' என்று தன் நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பித்தார். 

கொரோனா நெருக்கடியின்போது பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்புகளின்போது, அதிக சோதனைக் கருவிகள், பிபிஇ கிட்டுகள் மற்றும் அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் நிதிஷ். 

பாஜகவின் சட்டமன்ற தேர்தல் வீடியோ பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மாநில எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம், ‘கரீப் அதிகர் திவாஸ்' என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.  
 

.