இந்த வழக்கின் பிரச்னை 1990-களில் ஆரம்பிக்கிறது
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு (P Rajagopal) ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரான ஜீவஜோதி, தீர்ப்பு குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்த வழக்கின் பிரச்னை 1990-களில் ஆரம்பிக்கிறது. சரவண பவன், சென்னை கிளையில் பணி புரிந்து வந்த துணை மேலாளரின் மகளனா ஜீவஜோதியைத் திருமணம் செய்ய ஆசைபட்டுள்ளார் ராஜகோபால். ஜீவஜோதிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்கவில்லை. அந்த சமயத்தில் ராஜகோபாலுக்கு, இரண்டு மனைவிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 1999 ஆம் ஆண்டு ஜீவஜோதி, சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜகோபால், இளம் தம்பதியை விவாகரத்து செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு, ஜீவஜோதி மற்றும் சாந்தகுமார் தம்பதி, ராஜகோபால் தரப்பிடமிருந்து தங்களுக்கு மிரட்டல் வருவதாக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் அளிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் சாந்தகுமார் கடத்தி கொல்லப்படுகிறார். சாந்தகுமார், கொடைக்கானல் காட்டில் இருக்கும் பெருமாள்மலையில் கொன்று புதைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அந்த வழக்கில் நீதிமன்றம், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
2009 ஆம் ஆண்டு, அவருக்கு வழக்கில் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், உயர் நீதிமன்றத் தீர்ப்பு செல்லும் என்று கூறியுள்ளது.
இந்நிலையில் ஜீவஜோதி, ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், ‘இந்த வழக்கில் இப்படிப்பட்ட தீர்ப்பு வர நான் உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமல்ல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். ஜெயலலிதா, ஆட்சியில் இருந்தபோதுதான், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். காவல் துறையும் அவர்களது கடமையைச் செய்ய வைத்தார். பல ஆண்டுகள் இந்த வழக்கு நடந்து வந்தபோதும், இறுதியில் நீதியே வென்றுள்ளது' என்றுள்ளார்.
அவரிடம், ‘ஜெயலலிதாவுக்கு ஏன் நீங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளீர்கள். விரிவாக சொல்ல முடியுமா?' எனக் கேட்டதற்கு,
‘ராஜகோபால் தரப்பிடமிருந்து பலகட்ட பிரச்னைக்கும் துன்புறுத்தலுக்கும் நான் தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வந்தேன். அப்போது நான் ஜெயலலிதாவை சந்தித்து, பிரச்னை குறித்துக் கூறினேன். அப்போது அவர் ஆட்சியில் இல்லை என்றாலும், உதவி செய்வதாகச் சொன்னார். 2001 ஆம் ஆண்டு அவர் ஆட்சிக்கு வந்த உடன், வழக்கு குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டது. ஜெயலலிதா அம்மையார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருப்பேன்' என்று நெகிழ்கிறார்.