Read in English
This Article is From Sep 01, 2018

வாந்தி எடுத்ததால் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதற்கு 35 இலட்சம் இழப்பீடு

மினாலி மிட்டல் தனது இரு குழந்தைகளுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டொரோண்டோ செல்ல இருந்தார்

Advertisement
இந்தியா

ஜெட் ஏர்வேஸ், ஏர் கனடா ஆகிய நிறுவனங்களும் இழப்பீடு வழங்க உத்தரவு.

Chandigarh:

டெல்லியில் இருந்து டொரோண்டோ செல்ல இருந்த நிலையில், மினாலி மிட்டல், அவரது 11 வயது மகள் மற்றும் மூன்று வயது மகன் ஆகிய மூவரும் விமானத்தில் இருந்து சரியான காரணமின்றி கட்டாயமாக இறக்கிவிட்டப்பட்டுள்ளனர். இதனால் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காகவும் அலைக்கழித்ததற்காகவும் நெருக்கடியில் தள்ளியதற்காகவும் ரூபாய் 35 இலட்சம் இழப்பீட்டுத் தொகையை அளிக்க வேண்டும் என்று ஜெட் ஏர்வேஸ், ஏர் கனடா விமான சேவை நிறுவனங்களுக்கு சண்டிகரில் உள்ள பஞ்சாப் மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மினாலி மிட்டல் தனது இரு குழந்தைகளுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டொரோண்டோ செல்ல இருந்தார். இதற்காக அவர் மொகாலியுள்ள சண்டிகர் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லி வந்து; அங்கிருந்து கனடா செல்ல இருந்தார்.

தனது மனுவில் அவர், “டெல்லியில் ஏர் கனடா விமானத்தில் ஏறிய பின்பு என் மகள் தீஷா மிட்டல் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் கதவு மூடப்பட்டிருந்ததால் அவள் வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தாள். அப்போது கழிப்பறையில் இருந்து வெளிவந்த துர்நாற்றத்தால் குமட்டல் ஏற்பட்டு எனது மகள் வாந்தி எடுத்துவிட்டாள். இதனை நோயாகக் கருதிய விமானப் பணியாளர்கள் பிற பயணிகளின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு எங்களை இறக்கிவிட்டாக வேண்டும் என்று கூறி தகாத முறையில் நடந்துகொண்டு வலுக்கட்டாயமாக எங்கள் மூவரையும் இறக்கிவிட்டனர்” என்று புகார் கூறியிருந்தார்.

Advertisement

இம்மனுவை விசாரித்த நுகர்வோர் குறைத்தீர்ப்பு ஆணையத் தலைவர் பரம்ஜீத் சிங் தாலிவல் மற்றும் உறுப்பினர் கிரண் சிபல் ஆகியோர் ஜூலை 23 அன்று ஜெட் ஏர்வேஸ், ஏர் கனடா ஆகிய இரு நிறுவனங்களும் 35 இலட்சத்தைக் கூட்டாக மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டனர்.

“கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அன்று, இரவு நேரத்தில் சரியான, போதுமான காரணமின்றி மனுதாரர்களை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டது பெரிய சேவைக்குறைபாடும் சீரற்ற வணிக நடைமுறையும் ஆகும்” என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

மேலும், “பயணிகள் அவர்களின் உடைமைகள் அடங்கிய பெட்டிகளோ, உணவோ, ஒரு குடிநீர் பாட்டிலோ கூட இல்லாமல் இறக்கிவிடப்பட்டுள்ளனர். எதிர்தரப்பே ஒப்புக்கொண்டபடி மனுதாரர்கள் டெல்லியில் இறக்கிவிடப்பட்டபோது அவர்களது பெட்டிகள் இறக்கப்படவில்லை. மாறாக அவை டொரோண்டோ கொண்டுசெல்லப்பட்டன. இதையடுத்து கூட்டாக சேவையினை அளித்து வரும் இவ்விரு நிறுவனங்கள் மீதும் சட்டவிரோதமாக இறக்கிவிடப்பட்டதற்காக மனுதாரர்கள் நடவடிக்கை கோரலாம். சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளவற்றை மீறும் வகையில் விமானப் பணியாளர்களின் செயல் இருந்துள்ளது. அத்துடன், விமான நிறுவனங்கள் நுகர்வோருடன் தோழமையுடன் நடந்துகொள்ளும் அணுகுமுறையை வளர்த்துக்கொள்வதைக் குடிசார் பறப்பியல் பொது மேலாளர் உறுதிசெய்யவேண்டும்” என்றும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் தரப்பில், “வழக்குத் தொடர்ந்தவர்கள் உண்மைகளை மறைத்து தவறாக சித்தரித்துள்ளனர்” என்றும்; ஏர் கனடா தனியாக அளித்த பதிலில், “எங்களுக்கு விலை ஈடு எதுவும் அளிக்கப்படாததால் அவர்கள் எங்களது வாடிக்கையாளர்கள் அல்ல. மேலும் தீஷா மிட்டல் உடல்நிலை சரியில்லாது விமானத்திலேயே வாந்தியெடுத்தார். ஆகையால் நீண்ட தொலைவு செல்லும் அவ்விமானத்தில் பயணிக்கும் தகுதியுடன் அவர் உடல்நிலை இல்லை. பிற பயணிகளின் பாதுகாப்புக்காகவே அவரை இறக்கிவிட்டோம்” என்றும் கூறியிருந்தனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement