விமானத்தில் காற்றழுத்தம் குறைந்தவுடன் ஆக்சிஜன் மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது
New Delhi: மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் நோக்கி புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்றில், கேபினிலிருந்த காற்றழுத்தம் குறைந்ததாகவும் அதனால் பல பயணிகளின் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் தரையிறங்கியது.
விமானத்தில் 166 பயணிகள் இருந்தார்கள் எனவும், அவர்களில் 30 பேருக்கு மூக்கிலிருந்து ரத்தம் வடிந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் பலருக்கு தலைவலி ஏற்பட்டது என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து, விமானத்தில் காற்றழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கும் பட்டனை விமானக் குழு அழுத்தவில்லை என்றும் அதனால் தான் இந்த சம்பவம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
மும்பையில் விமானம் மீண்டும் தரையிறங்கிய உடன், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விமான விபத்து விசாரணை புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. அந்த அமைப்பு, ‘விமானத்தின் காற்றழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பட்டனை, விமானக் குழு அழுத்தத் தவறிவிட்டது. அது தான் இந்தப் பிரச்னைக்குக் காரணம்’ என்று கூறியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ‘நடந்த சம்பவம் குறித்து நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இந்த சம்பவத்துக்குக் காரணமான விமானக் குழுவிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விமானத்தில் சென்ற பயணிகள், ஜெய்ப்பூர் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது, விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.