மும்பை - ஜெய்ப்பூர் விமானம் 166 பயணிகளுடன் 5 பணியாளர்களுடன் சென்றது
Mumbai: மும்பையில் இருந்து ஜெய்ப்பூருக்கு ஜெட் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. அதில் பைலட் அறையில் உள்ள காற்றழுத்தத்தை கட்டுப்படுத்தும் சுவிட்சை ஆன் செய்யப்படாததால், அதிக அழுத்தம் ஏற்பட்டு சில பயணிகளுக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் 166 பேர் பணியாளர்கள் 5 பேர் என மொத்தம் 171 பேர் விமானத்தில் இருந்தனர். இவர்களில் 30-க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் அதிகம் பாதிக்கப்பட்ட 5 பேர் மும்பை பாலாபாய் நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை தேவையில்லை என்றும் 10 நாட்கள் ஓய்வெடுத்தால் குணம் அடைந்து விடும் என்றும் தெரிவித்தனர்.
விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானம் பறக்கவிருந்த நேரத்தில், ப்ளீட் ஸ்விட்சை ஆன் செய்ய பணியாளர்கள் மறந்துவிட்டனர். இதனால் அதிக அழுத்தம் ஏற்பட்டு, ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிப்படைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.