This Article is From Dec 23, 2019

''பாஜக தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது'' : சிவசேனா விமர்சனம்!!

Jharkhand Election 2019: குடியுரிமை சட்ட திருத்தம் பாஜகவுக்கு எந்த பலனையும் அளிக்காது மாறாக இன்னொரு மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுக்க வழிவகுக்கும் என்று பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் சிவசேனா விமர்சித்துள்ளது.

''பாஜக தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது'' : சிவசேனா விமர்சனம்!!

ஜார்க்கண்டில் குடியுரிமை திருத்த சட்டம் பாஜகவுக்கு பலன் கொடுக்கவில்லை என்று சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

New Delhi:

ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவில் பாஜக பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனா பாஜகவை தற்போது விமர்சித்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தம் பாஜகவுக்கு எந்த பலனையும் அளிக்காது மாறாக இன்னொரு மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுக்க வழிவகுக்கும் என்று பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் சிவசேனா விமர்சித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், டெல்லியில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஜார்க்கண்டில் கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தது. இங்கு தேர்தல் பிரசாரம் நடைபெற்ற போது மோடியும், அமித் ஷாவும் முழு பலத்தை காட்டி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். மோடியின் பெயரை சொல்லி வாக்கு வாங்கி விடலாம் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். 

நாட்டில் புதிய குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வந்த பின்னர், அது பாஜகவுக்கு ஜார்க்கண்டில் பலன் அளிக்கவில்லை. மகாராஷ்டிராவை தொடர்ந்து மீண்டும் ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்திருக்கிறது. 

மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்க்கண்டில் தோல்வி அடைந்துள்ள நிலையில் பாஜகவுக்கு தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்து விட்டது என்று கருதுகிறேன்.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தனது முக்கிய கூட்டணி கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் (AJSU) உடன் பிரச்னையை சந்தித்தது.

இரு கட்சிகளும் கடந்த 2014 தேர்தலில் இருந்து கூட்டணி கட்சிகளாக இருந்து வருகின்றன. இந்த தேர்தலில் அதிக சீட்டுகளை ஏ.ஜே.எஸ்.யு. கேட்டது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் கூட்டணி அமைக்கப்பட்டது. இருப்பினும், இரு கட்சிகளில் ஒன்று வலுவாக உள்ள தொகுதியில் மற்ற கட்சி போட்டியிடாது என முடிவு செய்யப்பட்டது. 

மகாராஷ்டிராவை பொறுத்தளவில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. முடிவுக்கு பின்னர் அதிகாரத்தில் பங்கு தர பாஜக மறுத்து விட்டதாக கூறி, சிவசேனா கூட்டணியை முறித்துக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக 'மகா விகாஸ் அகாதி' என்ற சிவசேனா, காங்கிரஸ், தேசியவா காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய கூட்டணி ஏற்படுத்தப்பட்டு ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக தோல்வியை தழுவுவதற்கு, கூட்டணி கட்சிகளை பாஜக அனுசரித்து செல்லவில்லை என்பதுதான் முக்கிய காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

இன்னொரு முனையில் எதிர்க்கட்சிகள் வலவான கூட்டணியை அமைத்துள்ளன. ஜார்க்கண்ட்டின் முக்கிய கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன்தான் முதல்வர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து தேர்தலை எதிர்கொண்டது. 

மகாராஷ்டிராவில் பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, கொள்கையால் முற்றிலும் வேறுபட்ட கட்சியாக இருப்பினும் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. 
 

.