2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளது பாஜக.
New Delhi: மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி பறிபோகும் நிலை உருவாகியுள்ள சூழலில், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாஜகவுக்கு சிக்கல் வெடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் அதிரடி அறிவிப்புகளால் பாஜக மாநில தலைமை கலங்கிப் போயுள்ளது.
81 எம்எல்ஏ தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் வரும் 30-ம்தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. தற்போது பாஜக ஆட்சியில் இருந்து வரும் சூழலில், அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை கட்சி தலைவர்கள் வகுத்துள்ளனர்.
பாஜகவுக்கு முக்கிய கூட்டணி கட்சிகளாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி எனப்படும் எல்.ஜே.பி. கட்சியும், ஜார்க்கண்ட் மாணவர்கள் யூனியன் கட்சியும் உள்ளன. எல்.ஜே.பி. கட்சியை தற்போது, ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் வழி நடத்துகிறார்.
கடந்த 2014 தேர்தலின்போது எல்.ஜே.பி. கட்சிக்கு ஒரேயொரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில், ஜர்முண்டி, நளா, உசைனாபாத், பர்காகோன், லாதர், பங்கி ஆகிய 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று எல்.ஜே.பி., பாஜகவிடம் வலியுறுத்தி வந்தது. இதற்கு பாஜக தரப்பில் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
இதையடுத்து 50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப்போவதாக எல்.ஜே.பி. கட்சி அறிவித்திருக்கிறது. இன்று மாலையில் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரது தந்தை மத்திய அமைச்சராக பாஜக அரசில் அங்கம் வகித்து வரும் நிலையில், மகனின் அறிவிப்பு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் தங்களுக்கு 19 சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாஜக தரப்பில் 9 சீட்டுகளுக்கு மேல் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளனர். இதையடுத்து 12 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஜார்க்கண்ட் மாணவர் யூனியன்அறிவித்திருக்கிறது.
கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால் புதிய சிக்கலில் ஜார்க்கண்ட் பாஜக சிக்கியுள்ளது. மகாராஷ்டிரா பிரச்னையே ஓயாத நிலையில், மற்றொரு விவகாரத்தில் பாஜக மாட்டிக் கொண்டுள்ளது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர்.
ஜார்க்கண்ட் முதல்வரான பாஜகவின் ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.