This Article is From Dec 02, 2019

’55 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் என்ன செய்தது?’: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் அமித் ஷா கேள்வி!

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்ட்டில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக டிசம்பர் 7-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

’55 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் என்ன செய்தது?’: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் அமித் ஷா கேள்வி!

மகாராஷ்டிராவில் ஆட்சி பறிபோன நிலையில் ஜார்க்கண்ட்டில் தக்க வைத்துக்கொள்ள பாஜக முனைப்பு காட்டுகிறது.

Chakradharpur:

ஜார்க்கண்ட் அரசியலில் கடந்த 55 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஜார்க்கண்ட் மாநிலம் மிக முக்கியமான ஒன்று. இங்கு 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இங்கு காங்கிரஸ், பாஜக இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி காணப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஆட்சியை இழந்துள்ள பாஜக ஜார்க்கண்ட்டில் அதனை தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டுகிறது.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரசின் ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் கேட்கிறேன். கடந்த 55 ஆண்டுகளாக வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என்று ஜார்க்கண்டில் வாக்குறுதி அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த 55 ஆண்டுகளாக நீங்கள் எதைச் செய்தீர்கள்?. நாங்கள் இங்கு கடந்த 5 ஆண்டுகளாகத்தான் ஆட்சியில் இருக்கிறோம்.

ஜார்க்கண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது வாக்காளர்கள்தான். தங்களது வாக்கு வளர்ச்சியின் பாதைக்கா அல்லது மீண்டும் நக்சல் பாதைக்கா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மலைவாழ் மக்களின் வளங்களை சுரண்டி, தங்களது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட எதிர்க்கட்சிகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவப்போவது இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

.