This Article is From Dec 23, 2019

சட்டமன்ற தேர்தல் முடிவு : ஜார்க்கண்டில் தோல்வியை ஒப்புக்கொண்டார் பாஜக முதல்வர் ரகுபர் தாஸ்!

முன்னதாக முடிவுகள் வெளியானபோது பாஜக பின்னடைவை சந்தித்திருந்தது. அப்போது பேட்டியளித்த ரகுபர் தாஸ் நிச்சயம் பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தார்.

சட்டமன்ற தேர்தல் முடிவு : ஜார்க்கண்டில் தோல்வியை ஒப்புக்கொண்டார் பாஜக முதல்வர் ரகுபர் தாஸ்!

Jharkhand election results: தோல்வியை முதல்வர் ரகுபர்தாஸ் ஏற்றுக் கொண்டார்.

Ranchi:

ஜார்க்கண்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாநிலத்தில் தோல்வியை பாஜக முதல்வர் ரகுபர் தாஸ் ஏற்றுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், 'ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் தோல்வியை பாஜக ஏற்றுக் கொள்கிறது. மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்' என்று தெரிவித்தார். இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணியை பெரும்பான்மையை கைப்பற்றி உள்ளது. 

முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளிவந்த சமயத்தில் பாஜக பின்னடைவை சந்திதிருந்தது. அப்போது பேட்டியளித்த ரகுபர்தாஸ், தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். இறுதி முடிவுகளுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். 

ஜாம்ஷெத்பூர் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரகுபர்தாஸ் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக அவர் கடந்த 1995-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இந்தளவுக்கு மாநிலத்தில் எந்தவொரு முதல்வரும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது கிடையாது. 

தேர்தல் முடிவு குறித்து அவர் இன்று காலையில் அளித்த பேட்டியில், 'ஒன்றிரண்டு தொகுதிகளில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். தற்போதைய ஆட்சிக்கு எதிரான அலை கூட வீசலாம். இருப்பினும் இறுதி முடிவுக்காக காத்திருக்கிறோம். மீண்டும் இங்கு பாஜக ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக உள்ளது' என்றார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், ஜார்க்கண்டில் பாஜக வெற்றி பெறுவது கடினம் என்று கூறியிருந்தன. பழங்குடியின பிரிவை சாராத ஜார்க்கண்டின் முதல் முதலமைச்சர் ரகுபர்தாஸ் ஆவார். அதேபோன்று, 5 ஆண்டுகால ஆட்சியை முழுவதுமாக நிறைவு செய்தவரும் அவர்தான். ஜார்க்கண்ட் மாநிலம் கடந்த 2000-ல் பீகாரில் இருந்து பிரிக்கப்பட்டது. 

இருப்பினும், பாஜக தோல்விக்கு ரகுபர்தாஸ் தான் முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. மாநிலத்தில் கடந்த 19 ஆண்டுகளில் அதிகமுறை பாஜகதான் ஆட்சியில் இருந்துள்ளது. 

பாஜகவின் பழங்குடியின தலைவரான அர்ஜுன் முண்டாவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அவரை ரகுபர் தாஸ் ஓரம் கட்டியதாக புகார்கள் கூறப்பட்டன. இதேபோன்று கூட்டணி கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் AJSU-ன் சுதேஷ் மாதோவையும், ரகுபர்தாஸ் மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

ரகுபர்தாஸின் கெடுபிடியான நடவடிக்கைகள் கட்சிக்குள் அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது. உடனடியாக கோபப்படும் அவர், கட்சித் தொண்டர்களை அரவணைத்துச் செல்ல மாட்டார் என்றும் புகார் கூறப்படுகிறது. 

.