இன்னும் சில வாரங்களில் புதிய அறிவிப்பை வெளியிடுகிறது ஜியோ.
சேவைக்கான கட்டணத்தை ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் உயர்த்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில் ஜியோவும் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது லட்சக்கணக்கான ஜியோ பயனாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டண உயர்வு எந்த அளவு இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளாக ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் மிகக் குறைந்த செலவில் ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோவின் வருகைக்கு முன்பாக இருந்த டேட்டா கட்டணங்கள், ஜியோவின் இலவச அறிவிப்புக்கு பின்னர் பன்மடங்கு குறைந்தன.
டேட்டா, கால் சேவையை ஜியோ ஆரம்பத்தில் இலவசமாக வழங்கி வந்ததால், மற்ற நெட்வொர்க்குகளும் தங்களது கட்டணங்களை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.
அதிகளவு டேட்டா பயன்பாடு ஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் டிஜிட்டல் பொருளாதாரம் சீரான வளர்ச்சியை சந்தித்தது. இந்த நிலையில் இழப்புகளை ஓரளவு பொறுத்துக் கொண்ட ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தற்போது கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன.
வரும் 1-ம்தேதி முதல் ஏர்டெல், வோடபோன் ஐடியா பயனாளிகள் கட்டண உயர்வை சந்திக்க நேரிடும். இந்த நிலையில், ஜியோவும் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. ஓரிரு வாரத்தில் இதுகுறித்த விவரம் வெளியாகிறது.
அதாவது, மற்ற நெட்வொர்க்குகள் கட்டண உயர்வை அறிவித்த பின்னர், அதற்கு போட்டி கொடுக்கும் வகையில் ஜியோவின் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மற்ற நெட்வொர்க்கை விட ஜியோவின் சேவையை குறைந்த செலவில் பெறலாம் என்பதை மட்டும் உறுதியாக நம்பலாம்.
செப்டம்பரில் முடிந்த காலாண்டுடன், தாங்கள் சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளதாக மொபைல் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.