JNU Students Protest: முழு கட்டண உயர்வு வாபஸ் பெற வேண்டும் என்று சொல்லி, தற்போதைய நடவடிக்கையை, ‘கண் துடைப்பு வேலை,’ என மாணவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- JNU மாணவர்கள், மத்திய டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர்
- மாணவர்கள், பெரும் பேரணியையும் முன்னெடுத்துள்ளனர்
- டெல்லி போலீஸின் அறிவுறுத்தல்படி டெல்லி மெட்ரோவின் 4 நிலையங்கள் மூடல்
New Delhi: டெல்லியில் (Delhi) உள்ள ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் (JNU University) சமீபத்தில் உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணம் முழுவதுமாக திரும்பப் பெறப்படும் என்பதை வலியுறுத்தி, பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். இதன் எதிரொலியாக டெல்லியின் 4 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், “டெல்லி போலீஸின் அறிவுறுத்தல்படி, உத்யோக் பவன், படேல் சவுக், மத்திய செக்ரடிரியேட், லோக் கல்யாண் மார்க் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன,” என்று தகவல் தெரிவித்துள்ளது.
இன்று மட்டும் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று நாடாளுமன்றம் நோக்கி, கட்டண உயர்வுக்கு எதிராக பேரணியையும் மேற்கொண்டனர் மாணவர்கள். ‘நாடாளுமன்ற அவையில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் எங்களின் பிரச்னைகளைக் குறித்து அறியவைத்து, போராட வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பேரணி நடத்தப்படுகிறது,' என மாணவர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் ஜே.என்.யூ பல்கலைக்கழகம் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி போலீஸ் கடும் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள். இன்று நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போதும் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு, போலீஸாரிடம் மல்லுக்கட்டினர் மாணவர்கள். இந்த கட்டண உயர்வு குழப்பத்தை சமாளிக்க மத்திய கல்வி அமைச்சகம், 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
ஜே.என்.யூ பல்கலைக்கழக நிர்வாகம், சமீபத்தில் விடுதியின் தனி நபர் அறையின் மாத வாடகையை 10 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்கு உயர்த்தியது. டபுள் அறையின் மாத வாடகையை 20 ரூபாயிலிருந்து 600 ரூபாய்க்கு மாற்றியது. விடுதியின் மெஸ்ஸுக்கான செக்யூரிட்டி வைப்புத் தொகையை 5,500 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தியது. இதை எதிர்த்துத்தான் மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து கட்டண உயர்வின் ஒரு பகுதித் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முழு கட்டண உயர்வு வாபஸ் பெற வேண்டும் என்று சொல்லி, தற்போதைய நடவடிக்கையை, ‘கண் துடைப்பு வேலை,' என மாணவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
With input from IANS, ANI