This Article is From Jan 10, 2020

JNU விடுதி மீதான தாக்குதலில் மாணவர் தலைவர் அய்ஷ் கோஷுக்கு தொடர்பா? போலீஸ் புதிய தகவல்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஏ.பி.வி.பி. அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

New Delhi:

டெல்லி ஜவகர்லால் பல்கலைக் கழகத்தில் விடுதியில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக டெல்லி போலீசார் புதிய படங்களை வெளியிட்டுள்ளனர். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இடதுசாரி மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள். இருப்பினும் முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாகவும் போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக விடுதி கட்டண உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடந்தன. இதுதொடர்பாக சுன்சுன் குமார், பங்கஜ் மிஷ்ரா, அய்ஷ் கோஷ், வாஸ்கர் விஜய், சுச்சிதா தலுக்தார், பிரியாரஞ்சன், தோலன் சாவந்த், யோகேந்திர பரத்வாஜ், விகாஸ் படேல் உள்ளிட்டோர் வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் பட்டியல் வெளியிட்டுள்ளனர். 

அய்ஷ் கோஷ் ஜே.என்.யூ.வில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவராக உள்ளார். யோகேந்திர பரத்வாஜ், விகாஸ் படேல் ஆகியோர் பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யில் உறுப்பினராக உள்ளனர். 

போலீசார் அளித்த தகவலின்படி இடதுசாரி மாணவர் அமைப்பினர் ஜே.என்.யூ.வின் சர்வர் அறையை தாக்கியுள்ளனர். ஆன்லைன் பதிவை நிறுத்தி வைப்பதற்காகவும், கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்தவும் அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். 

இருப்பினும், ஞாயிறன்று முகமூடி அணிந்து வந்து தாக்கியவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு போதியளவு சிசிடிவி பதிவுகள் இல்லாதது, உறுதிப்படுத்தப்படாத வீடியோக்கள் ஆகியவை முக்கிய காரணங்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த அய்ஷ் கோஷ் தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். தான் முகமூடி ஏதும் அணியவில்லை என்றும், இந்த விவகாரத்த்திற்கும் தனக்கும் சம்பந்தம் கிடையாது என்றும், இன்னமும் ரத்தத்தால் நனைந்த ஆடையுடன் தான் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். 

ஞாயிறன்று நடந்த தாக்குதலின்போது அய்ஷ் கோஷ் பலத்த காயம் அடைந்து ரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 4 நிமிடத்திற்குள்ளாக அவர் மீதும், இடதுசாரி மாணவர் அமைப்பினர் மீதும் போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். 

விடுதி கட்டண உயர்வை எதிர்த்து ஜே.என்.யூ. மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வுக்கு பதிவு செய்வதை தடுப்பதற்காக அவர்கள் ஜே.என்.யூ.வின் சர்வர் அறையை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. அவர்களுக்கும் பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

முகமூடி அணிந்தவர்கள் ஆசிரியர்கள், மாணவர்களை கடந்த ஞாயிறன்று கடுமையாக தாக்கினர். இந்த விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை.

தாக்குதல் சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற போதிலும் அவர்களை பிடிக்க போலீஸ் தவறி விட்டதாக குற்ச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. மீது ஜே.என்.யூ. மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை ஏ.பி.வி.பி. மறுத்துள்ளது. 

.