JNU: முகமூடி அணிந்த பெண் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் என சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
New Delhi: கடந்த வாரம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த முகமூடி கும்பல் தாக்குதலில் முகமூடி அணிந்து காணப்பட்ட பெண் போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டம் போட்ட சட்டை, ஊதா நிற முகமூடி அணிந்து, கையில் கட்டையுடன் காணப்படும் அந்தப் பெண் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் என சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் வட்டம் தகவல் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான விசாரணைக்கு டெல்லி போலீசார் 49 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதில், அந்த பெண்ணுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோ மற்றும் செக்யூரிட்டி, விடுதி வார்டன், மாணவர்கள் அளித்த தகவல்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில், காயமடைந்த மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் உட்பட சந்தேகத்திற்குரிய 9 பேர் கண்டறியப்பட்டு அவர்களது பெயரும் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ், முகமூடி அணிந்து செல்வது தான் அல்ல என்றும் தான் பாதிக்கப்பட்ட மாணவி என்றும், இன்னும் தன்னிடம் இரத்தம் படிந்த அந்த ஆடைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபடுவதற்காக உருவாக்கப்பட்ட இடதுசாரிகளுக்கு எதிரான வாட்ஸ்அப் குழுவில், உள்ள 37 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 2 பேர் இந்தியா டூடே செய்தி தொலைக்காட்சிக்கான ஸ்டிங் ஆபரேஷனில் ஈடுபட சென்றவர்கள் ஆவார்கள்.
இந்நிலையில், சிறப்பு விசாரணைக்கு குழு தனது விசாரணையை இன்று துவங்குகிறது. இதில், ஒவ்வொருவரும் தனித்தனியாக வெவ்வேறு நேரத்தில் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. மேலும், இதில் சம்மந்தப்பட்ட பெண்கள் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டிய தேவையில்லை என்றும், அவர்கள் விரும்பும் இடத்தில் பெண் அதிகாரிகள் மூலம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லி போலீசார் தெளிவாக இல்லாத சில புகைப்படங்களை வெளியிட்டனர். அவர்கள் ஜன.4 மற்றும் 5ம் தேதிகளில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக பல்கலைக்கழக சர்வர் அறையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறை தாக்குதலுக்கு இடதுசாரி அமைப்புகள் காரணம் என்றும் ஏபிவிபியும், ஏபிவிபியே காரணம் என்றும் இடதுசாரி அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றன.