காலிப் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
New Delhi: மத்திய அரசின் வெவ்வேறு துறைகளில் மொத்தம் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்துள்ள பதிலில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசில் உள்ள வெவ்வேறு துறைகளுக்கு மொத்தம் 38.02 லட்சம் பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். அந்த வகையில் மார்ச் 1, 2018- வரையிலான தகவலின்படி மத்திய அரசில் மொத்தம் 6.84 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இது பணியாளர்கள் ஓய்வு, மரணம், பதவி உயர்வு போன்ற காரணங்களால் இந்த காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை நிரப்புவதற்கு வெவ்வேறு அமைச்சகங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.
காலிப் பணியிடங்கள் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள மற்றொரு பதிலில், 2019-20-ம் ஆண்டில் 1,03,266 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி. (Staff Selection Commission) நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் சுமார் 1.50 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.