This Article is From Jan 03, 2019

2018ல் உலகை உலுக்கிய பத்திரிக்கையாளர் கொலைகள்!

இந்த வருடம் இந்திய அளவிலும், உலக அளவிலும் உறைய வைத்த பத்திரிகையாளர்கள் கொலை சம்பவங்கள் இதோ!

Advertisement
உலகம் Written by

கருத்துரிமை ஓங்கி ஒலிக்கும் போதெல்லாம் அதன் கழுத்துக்கு கத்தி வரும் என்பது உலகம் முழுவதும் உள்ள சூழல். அடக்குமுறைக்கு எதிராகவும், ஊழல்களுக்கு எதிராகவும் பத்திரிக்கையாளர்கள் போராடும் போது அவர்கள் கொல்லப்படுவது சர்வதேச அளவில் தினம்தினம் நடந்துகொண்டே உள்ளது. இந்த வருடம் இந்திய அளவிலும், உலக அளவிலும் உறைய வைத்த பத்திரிகையாளர்கள் கொலை சம்பவங்கள் இதோ!

 

1. நவீன் நிஸ்ஷால்

 

பிகாரில் உள்ள டைனிக் பாஸ்கர் பத்திரிகையில் பணி புரியும் இவர் நேரடி ரிப்போர்ட்டிங் மூலம் பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்தவர். தனது சக ஊழியருடன் 25 மார்ச் 2018 அன்று இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் ஒன்று மர்மமான முறையில் இவர் மீது மோதி கொல்லப்பட்டார். இவர் வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் விசாரணையில் உள்ளது.

2. சந்தீப் ஷர்மா

மத்திய பிரதேச மாநிலத்தில் ஊழல் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பணியில் இருந்த சந்தீப் ஷர்மா கொலை செய்யப்படுவதற்கு முன், மணல் கொள்ளை பற்றிய கட்டுரையை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். அந்தக் கட்டுரை வெளியாகி கொஞ்ச நாட்களிலேயே இவர் கொலை செய்யப்பட்டார். இவர் ட்ரக் மோதி உயிரிழந்தார். ட்ரக் ட்ரைவரை அழைத்து, இது கொலையா தற்கொலையா என்ற விசாரணை நடத்தப்பட்டு பின்னர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் கடிதங்கள் வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

3. சந்தன் திவாரி

ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடைய குழுக்களுடன் நெருக்கமான சிங் என்பவருடைய நிதி மோசடிகளை அம்பலமாக்கினார் சந்தன் திவாரி. அது குறித்த கட்டுரைகள் சிங்கிற்கு நெருக்கடி தந்தன. சில நாட்கள் கழித்து அக்டோபர் மாதம் காட்டுப்பகுதியில் திவாரி சடலமாக மீட்கப்பட்டார். சிங்குடன் ஏற்கெனவே கருத்துவேறுபாடு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்பட்டு சிங்கோடு 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சிங் மட்டும் விடுதலை செய்யபட்டார். ஆரம்பத்திலிருந்தே திவாரி, ஊழல்வாதி சிங் மீது கொடுத்த புகார்களை போலீஸ் விசாரிக்காமல் விட்டுள்ளது.

4. சுஜாத் புகாரி

'ரைசிங் காஷ்மீர்' பத்திரிகையின் ஆசிரியரான இவரை இப்தார் விருந்து முடிந்து அலுவலகத்துக்கு வெளியில் வந்த போது மர்ம நபர்கள் மூன்று பேர் சுட்டுக் கொன்றனர். இதன் பின்னணியில் தீவிரவாதிகளின் தொடர்பு இருக்கும் என்று கூறப்பட்டது. கொலை குறித்த தகவல்கள் வேறு ஏதும் வெளியாகவில்லை. பின்னர், பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் ஜிதேந்திர சிங்கை பாகிஸ்தான் உளவாளி என அடையாளம் காட்டி செய்தி வெளியிட்டது காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை இந்த வழக்கில் குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.

5. ஜமால் கசோக்கி

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளரான ஜமால் கசோக்கு அக்டோபர் 2ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அமீரகத்துக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பவே இல்லை. சவுதி இளவரசர் மீதான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வந்த கசோக்கு, மன்னர் உத்தரவால் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. 15 பேர் கொண்ட குழு வந்து அவரை கொன்று ஆசிட்டில் கரைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது காரணமாக அமெரிக்க பொருளாதார தடைகளை சவுதி மீது விதித்துள்ளது.

6. அப்துல் மேனன் அர்கன்ந்த்

காபூல் தொலைகாட்சியில் நிருபராக பணி புரிந்த இவருக்கு, ஒரு வருடமாகவே அலைபேசி மூலம் தொடர்ந்து ஆப்கான் பிரச்சனைகள் குறித்து செய்தி வெளியிட்டதற்கு கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருந்துள்ளது. ஏப்ரல் 25,2018 ஆப்கானில் காரில் சென்று கொண்டிருந்த இவரை 2 அடையாளம் தெரியாத நபர்கள் பைக்கில் வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

 

7. மிரே ஹசி!

சோமாலிய தலைநகரில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள எலிஸா பிஹாயா நகரில் மிரே ஹசி இரண்டு முறை தலையில் சுடப்பட்டுப் கொல்லப்பட்டார். இவர் ரேடியோ ஜர்னலிஸ்ட்டாக காலை செய்திகளை அப்டேட் செய்பவர். இவருக்கு போன் மூலம் ஏன் புரட்சியாளர்கள் உள்ள பகுதியில் ரேடியோ செயல்படவில்லை என்பது போன்ற அழைப்புகள் வந்துள்ளது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27 நடந்த கொலைக்கு, இதுவரை எந்த அமைப்பும் இவரது மரணத்துக்கு பொறுப்பேற்கவில்லை.

8. ரிப் ஹியாஸன்

அமெரிக்காவை சேர்ந்த 'கேப்பிடல் கஸாட்டே' பத்திரிகையின் எடிட்டரான இவர்மீது அவதூறு வழக்கு தொடர்ந்து அதில் இவர் வென்றார். தோற்றவர்கள் இவர் மீது உள்ள கோபத்தில் அலுவலகத்தின் உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். ஜூன் 28ம் தேதி இவர் கொலை செய்யப்பட்டார். இவர் கொலைக்கு காரணம் என்று கூறப்படும் ஜெரார்டு ராமோஸை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

9. ஜான் க்‌ஷியாக்

ஸ்லோவாக்கியாவின் தலைநகரில் இருந்து 50 கிமீ தொலைவில் வசிக்கும் இவர், மனைவியுடன் பிப்ரவரி 25ம் தேதி வெளியே சென்ற போது இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆளுங்கட்சியினர் மீதான வரி ஏய்ப்புகள் குறித்த கட்டுரைகளை எழுதியதாலும், க்ரைம் பகுதியில் பல முன்னணி பிரபலங்களை பற்றிய உண்மைகளை வெளிக் கொண்டுவந்ததாலும் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார் என்றும், யார் கொலை செய்தது என்று தெரியாத நிலையில் இந்த வழக்கு உள்ளது.

10. சோகைல் கான்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக முஸராத் இக்பால் என்பவர் பற்றி கட்டுரை வெளியிட்ட சோகைல் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தவாறு இருந்தது. சோகைல் கொலை செய்யப்பட்ட அக்டோபர் 16 அன்று காவல்துறையை அணுகி பாதுகாப்பு கேட்டுள்ளார். அன்றே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின் நடந்த விசாரணையில் இக்பால் தொடர்பு கண்டறியப்பட்ட போது அவர் ஈரானுக்கு தப்பி செல்லவிருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் தொடர்பில்லை என்று இக்பால் மறுத்தார். ஆனால் ஆதாரங்கள் இக்பாலுக்கு எதிராக உள்ளதால் இன்னும் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement
Advertisement