பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா.
New Delhi: பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. இதன்படி அவரை ரிசர்வ் போலீஸ் படையின் 35 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பார்கள்.
பாஜக தலைவராக இருக்கும் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல் பொறுப்பில் இருந்து அரசுப் பதவிக்கு அவர் மாறியுள்ளதால் அமித் ஷாவுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை செயல் தலைவராக பாஜக நியமனம் செய்தது.
இந்நிலையில், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கருதியுள்ளது. இதையடுத்து அவருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவரை பாதுகாக்கும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 35 கமாண்டோ வீரர்கள் ஈடுபடுவார்கள். அவருடன் எப்போதும் 8 முதல் 9 கமாண்டோ வீரர்கள் உடன் இருப்பார்கள்.
இந்தியாவில் ஜே.பி. நட்டா எங்கு சென்றாலும் அவருக்கு இத்தகைய பாதுகாப்பு வழங்கப்படும். தேவைப்பட்டால் இசட் பிரிவுப்படி அவரது வீட்டில் பாதுகாவலர்கள் நிறுத்தப்படுவார்கள்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)