முன்னதாக கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது.
New Delhi: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்த 2 நீதிபதிகளை மத்திய அரசு நிராகரித்த நிலையில் மேலும் 2 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதிகள் பரிந்துரை - நிராகரிப்பு விவகாரத்தால் உச்ச நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் இருக்க வேண்டிய நிலையில் 27 நீதிபதிகள் மட்டுமே தற்போது உள்ளனர்.
காலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருதா போஸ், கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது.
இதனை மத்திய அரசு நிராகரித்ததால் தற்போது பாம்பே உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரை கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது.
கொலிஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நரிமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.