4 வாக்காளர்களுக்காக ஆற்றைக் கடந்து தேர்தல் அதிகாரிகள் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
Koriya, Chhattisgarh: நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. வரவிருக்கும் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் அதிகபட்ச வாக்கு சதவீதத்தை எட்டுவதற்காக தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் 4 வாக்குகள் மட்டுமே கொண்ட கிராமத்திற்கு தேர்தல் அதிகாரிகள் தேர்தல் நடத்துவதற்கு சென்றுள்ளனர். பரத்பூர் - சோன்ஹாத் எம்.எல்.ஏ. தொகுதியில் உள்ள செராந்தந்த் என்ற கிராமம்தான் இங்கு நாம் குறிப்பிடும் 4 வாக்காளர்களை மட்டுமே கொண்ட கிராமம்.
இங்கு 4 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மாவட்ட தேர்தல் அதிகாரியான என்.கே. துக்கா, செராந்தந்த் கிராமத்திற்கு சென்று தேர்தல் அதிகாரிகள் முகாம் அமைப்பதற்கு முன்பாக, அரசியல் கட்சிகள் வாக்கு சேகரித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அந்த கிராமத்தை சென்றடைவதற்காக கல், முள் அடங்கிய சுமார் 6 கிலோ மீட்டர் பாதையையும், ஆற்றையும் கடந்து தேர்தல் அதிகாரிகள் சென்றுள்ளனர். மெயின் ரோட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் உள்ளது.
சத்தீஸ்கரில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு நவம்பர் 12-ம்தேதியும், 2-வது கட்டமாக நவம்பர் 20-ம்தேதியும் நடத்தப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம்தேதி நடைபெறுகிறது.