நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே.
New Delhi: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த பாப்டே தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகய் நவம்பர் 17-ம்தேதியுடன் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக நவம்பர் 18-ம்தேதி பாப்டே பொறுப்பு ஏற்கவுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 1956 ஏப்ரல் 24-ம்தேதி பிறந்த பாப்டே, கடந்த 2000-ல் பாம்பே உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பொறுப்புக்கு வந்தார்.
2012-ல் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்ந்தார். பின்னர் 2013 ஏப்ரலில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்புக்கு வந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக வருவதற்கு முன்பு, அயோத்தி - பாபர் மசூதி விவகாரம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்பான வழக்கு, பட்டாசு தொழிலாளர்கள் விவகாரம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் பணியாற்றியிருக்கிறார்.
தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் கடந்த 2018 அக்டோபர் 3-ம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றார். அவரது பதவிக்காலம் நவம்பர் 17-ம்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
அரசு நிர்வாகத்தின்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் ஓய்வுபெறுகிறார் என்றால் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியை அடுத்த தலைமை நீதிபதியாக தேர்வு செய்ய வேண்டும். இதற்கு தற்போதுள்ள தலைமை நீதிபதி அடுத்து அந்த பொறுப்புக்கு வரவேண்டியவரை பரிந்துரைக்கலாம்.
இதன்படி ரஞ்சன் கோகாயின் பரிந்துரை, மத்திய சட்ட அமைச்சகம் பிரதமர் மோடியிடம் அளித்த அறிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தலைமை நீதிபதியின் நியமனம் நடந்து முடிந்திருக்கிறது.