বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 18, 2019

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் எஸ்.ஏ.பாப்டே!

தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

எஸ்.ஏ.பாப்டே சுமார் 17 மாத காலம் பதவியில் நீடிப்பார், ஏப்.23 2021 அன்றுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பை தெரிவித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் எஸ்.ஏ.பாப்டேவும் இடம்பெற்றிருந்தார். 

மஹாராஷ்டிராவை சேர்ந்த பாப்டே, வழக்கறிஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை, அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாப்டே, பிரபலமான மூத்த வழக்கறிஞர் ஆவார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. 

Advertisement

பொதுவாக தலைமை நீதிபதி ஓய்வு பெறும்போது, அந்த பொறுப்புக்கு ஒருவரை பரிந்துரை செய்வது மரபு. அந்த வகையில் மூத்த நீதிபதியாக உள்ள சரத் அரவிந்த் பாப்டேவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு, ரஞ்சன் கோகாய் மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். 

அதன்படி 47-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.ஏ பாப்டே இன்று பதவியேற்றார். ஏப்.24, 1956ல் மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிறந்த நீதிபதி பாப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் எல்.எல்.பி பட்டங்களை முடித்தார். 1978ல் அவர் மகாராஷ்டிராவின் பார் கவுன்சில் வழக்கறிஞராக சேர்ந்தார்.

Advertisement

மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் பயிற்சி பெற்றார். தொடர்ந்து, 1998ல் மூத்த வழக்கறிஞராக திகழ்ந்தார். பின்னர் 2000ல் மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, 2012ல் மத்திய பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2013ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

Advertisement