New Delhi: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக, கே.எம்.ஜோசப், இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோர் இன்று பதவியேற்றனர். இன்று பதவியேற்பிலும் நீதிபதி ஜோசபின் பெயர் மூன்றாவதாக இருந்தததால், சீனியாரிட்டி விவகாரம் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.
உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் அளித்தது.
கடந்த மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செலமேஷ்வர், பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையொட்டி, கே.எம். ஜோசபின் பெயரை உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. அவரின் பெயரை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு, கொலிஜியத்துக்கு சொல்லிவிட்டது. இதையடுத்து அவரது பெயரை இரண்டாவது முறையாக கொலிஜியம் பரிந்துரை செய்தது.
கொலிஜியம், ஒரு நீதிபதியின் பெயரை இரண்டு முறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தால், மத்திய அரசு, அதனை ஏற்றாக வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக தகுதியடைவர்களை கொலிஜியம் பரிந்துரைத்தால் அதை மத்திய அரசு மறுக்கும் சம்பவம் எப்போதாவது தான் நடக்கும்.
இந்நிலையில் நீதிபதி ஜோசப்பின் பெயரை மத்திய அரசு திரும்ப அனுப்பியதற்கு வேறு காரணம் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் அமலாகியிருந்த ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக ஜோசப் தீர்ப்பளித்தார். இது காங்கிரஸ், அரசு அமைக்க ஏதுவாக ஆனது. அதனால்தான் நீதிபதி ஜோசபின் பெயரை மத்திய அரசு திரும்ப அனுப்பியது என்று குற்றம் சாட்டின எதிர்கட்சிகள்.
இது ஒருபுறமிருக்க, இன்று 3 நீதிபதிகளும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இதில் நீதிபதி ஜோசபின் பெயர் மூன்றவதாக இருந்தது. இதுவும் சர்ச்சைக்கு உள்ளானது. சீனியாரிட்டிபடி ஜோசப்தான் முதலில் உறுதிமொழி ஏற்க அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் சொல்கின்றன. ஆனால், அரசு தரப்போ, மற்ற இரண்டு நீதிபதிகள் தான் ஜோசபுக்கு சீனியர், எனவே தான் அவரது பெயர் மூன்றாவதாக இருந்தது என்று கூறியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸின் கபில் சிபில், ‘நீதிமன்ற வரலாற்றில் இது ஒரு கறுப்பு நாள்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நீதிபதி ஜோசப் தொடர்பான சீனியாரிட்டி விஷயம் தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது.