பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்த ஒரு சில நிமிடங்களில் காங்கிரஸில் இருந்து சிந்தியா விலகினார்.
ஹைலைட்ஸ்
- பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா!
- கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
- காங்கிரஸ் முன்பு இருந்ததைப் போல இப்போது, இல்லை - சிந்தியா
New Delhi: 18 வருடங்களாகக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கி வந்த ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைந்துள்ளார். சிந்தியாவுக்கு ஆதரவாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்களும், சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இதனால், மத்தியப் பிரதேசத்தில் 15 மாதங்களே ஆன கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்றைய தினம் நாடு முழுவதும் பரவலாக ஹோலி கொண்டாட்டங்கள் நடந்து வந்த நிலையில், ஜோதிராதித்ய தனது வண்டியை அமித் ஷா வீட்டுப் பக்கம் திருப்பினார். பின்னர் அங்கிருந்து இருவரும் பிரதமர் மோடி இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு நடந்து முடிந்த ஒரு சில மணி நேரங்களிலே சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகத் தனது ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டார். தொடர்ந்து, தனது பதிவில் சோனியா காந்திக்கு அவர் அளித்த ராஜினாமா கடிதத்தையும் பதிவேற்றம் செய்திருந்தார்.
முதலில் சிந்தியா பிற்பகல் 12.30 மணி அளவில் பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் ராகு காலம் காரணமாக 2 மணிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து, சிந்தியாவுக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல், அமைச்சரவையிலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்புகள் பாஜகவால் தொடர்ந்து அறிவிக்கப்பட உள்ளது.
பாஜகவில் இணைந்த சிந்தியா கூறியதாவது, 'காங்கிரஸ் முன்பு இருந்ததைப் போல இப்போது, இல்லை'. அது தற்போது மறுப்பு கொள்கையில் உள்ளது என்று கூறினார். தங்களது குடும்பத்திற்குள் என்னை வரவேற்ற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 116 எம்எல்ஏக்கள் தேவையென்ற நிலையில், 4 எம்எல்ஏக்களை மட்டுமே காங்கிரஸ் அரசு கூடுதலாக வைத்திருந்தது. மொத்தம் 230 உறுப்பினர்கள் உள்ள சட்டமன்றத்தில் 21 எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், பெரும்பான்மைக்கு 104 உறுப்பினர்கள் தேவை என்ற நிலை ஏற்படும். இதனால், ஏற்கனவே 107 எம்எல்ஏக்களை தன்வசம் கொண்ட பாஜக எளிதாக ஆட்சியைப் பிடிக்க இது உதவும்.
தொடர்ந்து, குதிரை பேரத்தைத் தவிர்க்கக் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தங்களது எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர். பாஜகவினர் தங்கள் எம்எல்ஏக்களை குர்கானில் உள்ள ஐடிசி கிராண்ட் பாரத் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்துள்ளனர். காங்கிரஸ் தரப்பினர் தங்களது ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு எம்எல்ஏக்களை அழைத்துச்சென்றுள்ளனர்.
94 எம்எல்ஏக்களை காங்கிரஸ் ஜெய்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளது. மேலும், கர்நாடகாவில் தங்கவைக்கப்பட்டுள்ள சிந்தியாவுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் 19 பேரும் பாஜகவில் இணைய மாட்டார்கள் என்றும், அதனால், பெரும்பான்மை குறித்து கவலை தேவையில்லை என்றும் மத்தியப் பிரதேசத்தை கமல்நாத் கூறியுள்ளார்.
தொடர்ந்து, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறும்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் மீண்டும் கட்சிக்குத் திரும்புவார்கள் அவர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறேன் என்றார்.
டெல்லி வன்முறை தொடர்பாக பாஜகவை கடுமையாக விமர்சித்த ஜோதிராதித்ய சிந்தியா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இது காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில், முதல் வெற்றியாக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது.