தேர்தல் 2019: தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு இடையிலான அதிகார சமன்பாடு என்பது மாறிவிட்டது.
ஹைலைட்ஸ்
- தேர்தலில் மாநிலக் கட்சிகள் வரவேற்பு பெறும் என கருத்துகணிப்புகள் கூறுகின்ற
- மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் என தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளார்.
- 2014 போல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது.
Hyderabad: காங்கிரஸ் - பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைய மாநிலக் கட்சிகளுக்கு தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை இந்த மூன்றாம் அணியை உருவாக்குவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாத அவர் தற்போது அது அமைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மக்களவை தேர்தலில் மாநிலக் கட்சிகள் முன்னணி பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், அவர் தான் பிரதமராக விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் ஆக வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல, அது எனது கொள்கையிலும் இல்லை. பிரதமர் ஆவது என்பது முக்கியமானதும் அல்ல என்று என்டிடிவி பிரனாய் ராயிடம் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதும் முதல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சந்திரசேகர ராவ் ஆவார். அவர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அடுத்த அரசாங்கத்தை எந்த ஒரு தனிகட்சியும் தனியாக உருவாக்க முடியாது.
2014 தேர்தல் போல் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. அவர்கள் கடந்த முறை வெற்றி பெற்ற அனைத்து தொகுதியிலும் இந்த முறை படுதோல்வி அடைவார்கள். கடந்த தேர்தலை போல், இந்த 2019 தேர்தல் நிச்சயம் இருக்காது. இது முற்றிலும் மாறுபட்ட தேர்தலாக இருக்கும் என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு இடையிலான அதிகார சமன்பாடு என்பது தற்போது மாறிவிட்டது. முந்தைய காலங்களில், மாநிலக் கட்சிகள் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், தற்போது, அந்த நிலைமை அப்படியே மாறிவிட்டது. தற்போது தேசிய கட்சிகள் தான் மாநிலக் கட்சிகளிடம் ஆதரவு கோர வேண்டும் என்ற நிலை உள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மாற்று கட்சி உருவாக வேண்டும், அதற்கான தேவை தற்போது வந்துள்ளது. பாஜகவும், காங்கிரசும் நாட்டிற்கு வழங்குதில் மோசமான தோல்வி அடைந்துள்ளன. அதனால், நாட்டில் வெற்றிடம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக புதிய மாற்று கட்சிக்கான தேவை அதிகரித்துள்ளது என்பது எனது தனிப்பட்ட எண்ணமாக உள்ளது. அதனால் தான் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து தேசிய கட்சியை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். அதுவே தற்போது இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த வருடம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரை சந்தித்து காங்கிரஸ், பாஜக இல்லாத மூன்றாவது அணியை உருவாக்க ஆதரவு தர வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வந்தார். எனினும் அதைத்தொடர்ந்து அவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.