This Article is From Aug 14, 2018

‘கருணாநிதி இறுதிச் சடங்கில் முதல்வர் பங்கேற்றிருக்க வேண்டும்!’ - ரஜினி கருத்து

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நேற்று சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

‘கருணாநிதி இறுதிச் சடங்கில் முதல்வர் பங்கேற்றிருக்க வேண்டும்!’ - ரஜினி கருத்து
Chennai:

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நேற்று சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர் தலைமையிலான அமைச்சர்கள் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருக்க வேண்டும்’ என்று கருத்து கூறியுள்ளார். 

மேலும் பேசிய ரஜினி, ‘கருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு இந்தியாவே மெரினா கடற்கரைக்கு வந்திருந்தது. முப்படையும் அவருக்கு மரியாதை செலுத்தின. 21 குண்டுகள் முழங்க அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் வந்து கருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். அப்படியிருக்க, தமிழகத்தின் முதல் குடிமகனான முதல்வர் கலந்து கொண்டிருக்க வேண்டாமா? மொத்த அமைச்சரவையும் கலந்து கொண்டிருக்க வேண்டாமா? மக்கள் என்ன நினைப்பார்கள்? நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா அல்லது ஜெயலலிதாவா? ஒருவேளை கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தால், நானே போராட்டத்தில் குதித்திருப்பேன். பல்லாயிரம் பேர் அவரால் அரசியலுக்கு வந்தனர். பல நூறு பேர் அவரால் தலைவர்கள் ஆகினர்’ என்று தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் மகனும் திமுக-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

.