This Article is From Feb 03, 2019

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சி தலைமை அறிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்!

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ., ஹெச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி, கடலூர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். 1991ல் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ல் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

gkuqjugo

இதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான டாக்டர்.கே.ஜெயக்குமார், சென்னை ஐஐடியில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் ஆவார். இவர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக தொடர்ந்து 15 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். அதேபோல், தொடர்ந்து இரண்டுமுறை (2001-06, 2006-11) சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்.கே.ஜெயக்குமார் என்டிடிவி தமிழுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு காங்கிரஸில் புதிய தலைவரையும், 4 செயல்தலைவர்களையும் ராகுல் காந்தி தற்போது நியமித்துள்ளது கட்சியில் புது தெம்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அனுபவம், திறமை மற்றும் இளமையும் இணைந்ததாக இருப்பவர்களை சேர்த்திருப்பது கட்சிக்கு மேன்மை கூட்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ள இத்தருணத்தில், திமுகவோடு இணைந்து செயல்பட காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பதவி நியமனங்கள் மிக்க பலன் உள்ளதாக இருக்கும்.

மு.க.ஸ்டாலின் தலைமையும், அதோடு ராகுல் தலைமையும் இணைந்து, வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இக்கூட்டணி வெற்றி பெறும் என்று டாக்டர்.கே.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

.