சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அழகிரி.
ஹைலைட்ஸ்
- திமுக-வுடன் கூட்டணி வலுவாக உள்ளது, கே.எஸ்.அழகிரி
- மக்கள் எங்கள் கூட்டணியின் பக்கம்தான் உள்ளனர், கே.எஸ்.அழகிரி
- இந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படவில்லை
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி, இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்துள்ளார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அழகிரி.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அழகிரி, ‘மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் எடப்பாடி அரசும் தங்களுடைய தவறான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக கொள்கைகளினால் மக்களுடைய 100 சதவிகித வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே, அந்த சூழலில் மக்களுடைய எண்ணத்தை வாக்குகளாக மாற்ற எங்களுடைய கூட்டணி கடுமையாக உழைத்து வருகிறது. எங்களால் வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும்.
ராகுல் காந்தி தலைமையில் அடுத்து ஆட்சி அமையும். இது சம்பந்தமாக திமுக தலைவர் ஸ்டாலினோடு கலந்தாலோசித்தோம். மக்களுடைய ஆதரவு எங்கள் கூட்டணிக்கு இருக்கிறது என்பது மகிழ்ச்சிகரமான விஷயம். இந்த சந்திப்பு நன்றகா நடந்தது.
தேர்தல் அறிவித்துடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நாங்கள் ஆரம்பிப்போம். அது மிக சுமூகமாக நடக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். தமிழகத்தின் சூழல் மிகத் தெளிவாக இருக்கிறது. தமிழக மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்' என்று முடித்தார்.