This Article is From May 26, 2020

கலைஞர் பிறந்தநாள்; உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக் காட்ட வேண்டும்: ஸ்டாலின்

மக்களின் அச்சம் போக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தைச் செய்தோம். முகக்கவசம், கிருமிநாசினி போன்ற பொருட்களையும் வழங்கினோம்

Advertisement
தமிழ்நாடு Posted by

கலைஞர் பிறந்தநாள்; உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக் காட்ட வேண்டும்: ஸ்டாலின்

கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியை உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக் காட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக ஸ்டாலின் கூறியதாவது, கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3. இந்த ஆண்டு 97-வது பிறந்த நாளாகும். இன்னும் மூன்று ஆண்டுகளில் நம் தலைவரின், நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறோம். திருவாரூர் திருக்குவளையில் பிறந்து, தமிழ்நாட்டுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, 95 ஆண்டுகள் வரை இனத்துக்காகவும், மொழிக்காகவும், நாட்டுக்காகவும், உழைத்து இன்றைய தினம் அண்ணாவின் அருகே வங்கக் கடலோரம் ஓய்வினை மேற்கொண்டிருக்கிறார்,

1957-ம் ஆண்டு முதல் தனது இறுதி மூச்சு நின்ற காலம்வரை நடந்த தேர்தல்கள் அனைத்திலும் வென்று, சட்டப்பேரவையில் பங்கெடுத்து, இச்சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் அவர் ஆர்வத்துடனும், தனித் திறமையுடனும் வாதாடினார். 1969-ம் ஆண்டு முதல் ஐந்து முறை - மொத்தம் 19 ஆண்டுகள், தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து, அவர் இட்ட ஒவ்வொரு கையெழுத்தும் தமிழகத்தின் தலையெழுத்தைத் தகவமைத்து மாற்றுவதாகத்தான் அமைந்திருந்தன.

முதுமை நிலையில், வீட்டில் ஓய்வெடுத்த காலத்தில் கூட அவரது இதயம், இம்மக்களுக்காகத்தான் துடித்தது. அவர்களுக்காகவே எப்போதும் சிந்தித்தது. எங்களை நோக்கி அவர் இட்ட கட்டளைகள் அனைத்தும், மக்கள் நலன் சார்ந்ததாக, மேம்பாடு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்காகவே சிந்தித்து, தமிழ்நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்து, இயங்கிய அந்தத் தலைவரின் பிறந்த நாளை, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டாடுவதே பொருத்தமானதாகவும், சரியானதாகவும் இருக்கும்.

Advertisement

அதுவும் கொரோனா என்ற கொடிய நோய்த்தொற்று பரவி பெரும் பரிதவிப்பையும் இன்னலையும் மக்கள் சந்தித்து வரும் காலம் இது. ஒருபக்கம் நோய்த்தொற்று குறித்த பயமும், இன்னொரு பக்கம் பொதுமுடக்கம் காரணமாக வாழ்க்கையும் - வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு மக்கள் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களும், காணக் கண் கூசத்தக்க இன்றைய மோசமான காட்சிகளாக இருக்கின்றன.

நோய்த் தொற்று குறித்து அரசாங்கத்துக்கு காலத்தே எச்சரிக்கை விடுத்து அறிக்கைகள் விட்டதோடு தனது கடமை முடிந்ததாக திமுக இருந்துவிடவில்லை. மக்களின் அச்சம் போக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தைச் செய்தோம். முகக்கவசம், கிருமிநாசினி போன்ற பொருட்களையும் வழங்கினோம். இதன் அடுத்தகட்டமாக அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கினோம்.

Advertisement

பல இடங்களில் நிதி உதவியும் செய்தோம். மேலும், உணவுகள் தயாரித்துப் பல லட்சம் பேரின் பசியை ஆற்றினோம். கொரோனாவுக்கான ஊரடங்கு காலம் முதல் இதனை திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் களத்தில் நின்று மக்களுக்குக் காவல் அரணாக, உதவிடும் கரங்களாக இருந்தார்கள்; இருந்தும் வருகிறார்கள்.

கலைஞர் இருந்திருந்தால், இதைப் பார்த்துப் பரவசம் கொண்டிருப்பார். இவற்றைச் செய்யவே இன்முகத்துடன் கட்டளையிட்டிருப்பார். அவரே பல இடங்களில் பொருட்கள் வழங்க ஓடோடி வந்திருப்பார். அத்தகைய தலைவரின் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாளையும், இதுபோன்ற நல்ல உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று, திமுக தோழர்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோளாக வைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement