This Article is From Jul 31, 2018

‘கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது!’- மு.க.ஸ்டாலின் தகவல்

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவு காரணமாக பொது வாழ்விலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி

Advertisement
தெற்கு Posted by

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து திமுக-வின் செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவு காரணமாக பொது வாழ்விலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இந்நிலையில் அவர், இம்மாதம் 18-ம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த ட்ரக்கியஸ்டமி கருவி நீக்கப்பட்டு பதிய கருவி பொருத்தப்பட்டது. அதையடுத்து, அவர் அன்று இரவே வீடு திரும்பினார். 

ஆனால், கடந்த சனிக்கிழமையன்று ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் மோசமானது. அதனால், அவர் மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை தேறியுள்ளதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து அவருக்கு மருத்துவக் குழு சிகிச்சை கொடுத்து தீவிர கண்காணிப்பில் வைத்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. தொடர் சிகிச்சையால், அவரது உடல் நலம் சீராகி வருகிறது. மருத்துவக் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் கூறுகையில், ‘ஞாயிற்றுக் கிழமை இரவு, காவேரி மருத்துவமனை வெளியிட்டிருந்த தலைவர் அவர்களின் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், இன்றும் தலைவர் அவர்களின் உடல்நிலை அதே நிலையில் நீடித்து வருகிறது. தொடர்ந்து தலைவர் அவர்களுக்கு தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதோடு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement