தமிழர்களின் நினைவுகளுடன் கலந்தவர் கலைஞர்: கமல்ஹாசன் புகழாஞ்சலி!
தமிழர்களின் நினைவுகளுடன் கலந்தவர் கலைஞர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாஞ்சலி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரினா கடற்கரையில் சிறிது தூரம் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்ட திமுக முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இந்நிலையில், கலைஞருக்கு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர் என்று தெரிவித்துள்ளார்.