This Article is From Jul 23, 2018

ஸ்பைஸ் ஜெட் தொடர்பான வழக்கு: கலாநிதி மாறனுக்கு பின்னடைவு!

டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கு ஒரு நடுவர் மன்றத்தை அமைத்தது

ஸ்பைஸ் ஜெட் தொடர்பான வழக்கு: கலாநிதி மாறனுக்கு பின்னடைவு!

தனக்கும் தனது கே.ஏ.எல் ஏர்வேஸ் நிறுவனத்துக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஸ்பைஸ் ஜெட்டின் தற்போதைய நிர்வாகத்திடம் 1,323 கோடி ரூபாய் கேட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டிருந்தார் ஸ்பைஸ் ஜெட்டின் முன்னாள் உரிமையாளர் கலாநிதி மாறன். இதில் அவருக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஸ்பைஸ் ஜெட்டின் பெரும் பகுதி பங்குகள் கலாநிதி மாறனின் கே.ஏ.எல் ஏர்வேஸ் நிறுவனத்திடம் தான் இருந்தது. அப்போது, ஏற்பட்ட பண நெருக்கடி காரணமாக 58.46 சதவிகித பங்குகளை அஜய் சிங் என்பவருக்கு கே.ஏ.எல்  நிறுவனம் விற்றது. 

அப்போது பல்வேறு காரணங்களுக்காக கலாநிதி மாறன், 679 கோடி ரூபாயை ஸ்பைஸ் ஜெட் நிறுவனதுக்கு கொடுத்ததாகவும், அந்தத் தொகை திரும்ப தரப்படவில்லை என்றும் கலாநிதி மாறன் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, கலாநிதி மாறன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கு ஒரு நடுவர் மன்றத்தை அமைத்தது. 

நடுவர் மன்றம் விசாரணை முடிந்துள்ள நிலையில், ‘கலாநிதி மாறன் நிறுவனத்துக்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கும் இடையில் நடந்த பங்கு மாற்றத்தில் எந்த வித குளறுபடிகளும் நடக்கவில்லை. அதே நேரத்தில் பங்கு மாற்றத்தின் போது, கலாநிதி மாறன் தரப்பு கொடுத்த 308 கோடி ரூபாய் பணத்தை 12 சதவிகித வட்டியுடன் 30 மாதங்களுக்குள் ஸ்பைஸ் ஜெட் கொடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் தற்போது 60.25 சதவிகித பங்குகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.