கஜா புயல், டெல்டா மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களை புறட்டிப் போட்டதையடுத்து, பல இடங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், டெல்டா மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்.
அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘பல இடங்களில் மக்களை இன்னும் யாருமே வந்து பார்க்கவில்லை என்ற தகவல் எனக்கு சொல்லப்படுகிறது. இந்த அவலம் நீங்க வேண்டும். இது துக்கம் விசாரிப்பதற்கான நேரம். மக்களை ஆறுதல் படுத்தவேண்டிய நேரமிது. இது நான், நீ என்று இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்.
நேற்று வரை இங்கு இருக்கும் விவசாயிகள் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்று வாழ்வாதாரத்தை இழந்து வாடி வருகின்றனர். கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் நகரங்களுக்கு இடம் பெயரும் நிலைக்கும் நாம் அவர்களை விட்டுவிடக் கூடாது. விவசாயிகளின் வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அரசை விமர்சனம் செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. அனைவரும் நிவாரணப் பணிகளை இன்னும் துரிதமாக செய்ய வேண்டும் என்று தான் சொல்கிறோம். அதை ஊடகங்கள் வாயிலாகவே அனைவருக்கும் எடுத்துச் சொல்கிறேன்' என்று கூறினார்.