ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் மிக முக்கியமாக ஊடக சுதந்திரம் காக்கப்படவேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால், நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபாலை இன்று காலை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் மீது பிரிவு 124-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கைது செய்யப்பட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் காவல்நிலைய வாயிலில் தர்ணா மேற்கொண்டார். வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி கோரியும் மறுப்பு தெரிவித்த காவல்துறையை அவர் கடுமையாக கண்டித்தார். இதைத்தொடர்ந்து வைகோவும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
நக்கீரன் கோபாலை கைதை தொடரந்து எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் நக்கீரன் கோபால் கைதை கண்டித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’மக்களின் கருத்து சுதந்திரம் எப்போழுதெல்லாம் பாதிப்புக்குள்ளாகிறதோ அப்போதெல்லாம் அதைச் சீர்படுத்தும் மாண்பு ஊடகங்களுக்கே உரியது.
அந்த ஊடகங்களின் சுதந்திரத்தில் கை வைப்பது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதற்கு ஒப்பாகும்.
ஆங்கிலேயர் காலத்து ‘வாய்ப்பூட்டுச் சட்டம்’ தற்பொழுது வேறு ஒரு வடிவத்தில் இந்த அரசால் செயல்படுத்தப்படுகிறது.
ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் மிக முக்கியமாக ஊடக சுதந்திரம் காக்கப்படவேண்டும். நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.