Rajini - Kamal duo: நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது மக்கள் நீதி மய்யம்.
Rajini - Kamal duo: அரசியலில் சீக்கிரமே தடம் பதிக்கவுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, அரசியல் காலூன்றியுள்ள நடிகர் கமல்ஹாசன் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். திருச்சியில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கிராமசபை விழிப்புணர்வுக் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மத்தியில் கலந்து கொண்டு பேசினார் கமல்.
பின்னர் விமான நிலையத்துக்கு வந்த அவர், “நம் தமிழகம் முன்னேற அனைவரும் முன் வந்து உதவி செய்ய வேண்டும். செயல் உதவி செய்ய முடிந்தால் மக்கள் அதில் ஈடுபட வேண்டும். பொருள் உதவி செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்கள் அதைச் செய்ய முன்வர வேண்டும். எல்லா தமிழர்களுக்கும் தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல கடமையுள்ளது.
அனைவரும் முதலீடு செய்ய வேண்டும். உழைப்பை, வியர்வையை முதலீடு செய்ய அனைவரும் முன்வர வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தமிழகத்தை அதற்கு உரிய இடத்திற்கு அழைத்துச் சென்று வைக்க வேண்டும். நண்பர் ரஜினிகாந்தும் நல்லது செய்ய முன்வர வேண்டும்,” என்று சொன்னார்.
நடிகர் கமலும் ரஜினிகாந்தும் திரைத் துறையில் நண்பர்களாக இருந்தாலும் அரசியல் களத்தில் ஒன்று சேர்ந்து பணியாற்றுவது கடினம் என்றே சொல்லப்படுகிறது. இது குறித்து ரஜினி பேசும்போது, “தமிழகத்தின் நலனுக்காக கமலுடன் இணைய நேர்ந்தால் இணைவேன்,” என்று அதிரடியாக சொன்னார். இதே கருத்தை கமலும் வழிமொழிந்தார்.
இருவரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்துத்தான் காய் நகர்த்தி வருகிறார்கள். இரு ரசிகர்கள் மத்தியிலும் பரஸ்பரம் தங்களது அபிமான நாயகனே முதல்வராக வர வேண்டும் என்கின்ற எண்ணம் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது மக்கள் நீதி மய்யம். இந்த வாக்கு வங்கியை வைத்து தனித்துப் போட்டியிட்டால் களத்தில் உள்ள இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவை எதிர்க்க முடியாது என்று மய்யத்திற்கு நன்றாகத் தெரியும்.